தமிழர்களின் நிலத்தை தமிழரே ஆள வேண்டும் : சீமான்

14.4.16

நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் கோவை மசக்காளி பாளையம் பகுதியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.


அப்போது அவர்,   ‘’தமிழர்களின் நிலத்தை தமிழரே ஆள வேண்டும் என்ற லட்சியத்தில் தேர்தலில் களம் இறங்கி உள்ளோம். இதற்கான உரிமையை கேட்டு உங்களிடம் வந்துள்ளோம்.


தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என்கிறார் கலைஞர். கச்சத்தீவை கொடுத்தது, கொடுத்தது தான் என்கிறது காங்கிரஸ். ஆனால் இரண்டு பேரும் தேர்தலில் கூட்டு வைத்துள்ளனர். எல்லாம் ஏமாற்று பேச்சு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


என்னால் தான் மதுக்கடைகளை மூட முடியும் என்கிறார் கலைஞர். ஆம் அவர் தானே அதனை திறந்து வைத்தது. ஆகவே அவரால் தான் மூட முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிராமத்தில் உள்ளவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறங்களை நோக்கி வராமல் இருக்க கிராமப்புறங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம். பசி என்ற சொல்லை தமிழர் அகராதியில் இருந்து ஒழிப்போம்.


படித்தவர்கள், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை அளிப்போம். வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்து விட்டு நுங்கு, இளநீர், பனம்பால், தென்னம்பாலை கொண்டு வருவோம். நாங்கள் வெற்றி பெற்றால் தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியை கொண்டு வருவோம். அதனால் தான் 234 தொகுதிகளிதும் புதுமுகங்களை, இளைஞர்களை நிறுத்தி உள்ளோம். அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களியுங்கள். ஒரு முறை எங்களுக்கு ஓட்டுப் போட்டு பாருங்கள். மாற்றத்தை கொண்டு வருவோம்’’என்று தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :