ஆங்கிலேயர் ஒப்படைத்த தமிழர்களின் நாட்டை சிங்களவர்கள் திருப்பித் தர வேண்டும்! - இரா.சம்பந்தன்

14.2.16


ஆங்கிலேயர்களால், சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழர்களின் நாடு மீண்டும் தமிழர்களுக்கே கையளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திவயின சிங்கள வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    
இந்தநாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவாவில் இணக்கப்பாடு கண்டதன் அடிப்படையில் தற்போது இலங்கை மீண்டும் சர்வதேச கௌரவத்தை பெற்றுள்ளது. எனவே இது தொடர்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதான நியாயமான விசாரணை நடத்தப்படுவதன் ஊடாக மட்டுமே இலங்கை தனது கௌரவத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நாம் அனைவரும் இலங்கையர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இனத்துவ ரீதியில் தனித்துவமானவர்கள். அதன் காரணமாக தமிழர்களுக்கு தனியான பிரதேச சுயாட்சி வேண்டும். அதற்கு ஈடான அதிகாரத்தை ஏனைய சிங்களப் பகுதிகளுக்கும் வழங்குவதில் தவறில்லை. அந்நியர் இந்நாட்டை ஆக்கிரமிக்க முன்னர் இந்நாட்டு கண்டி ராஜ்ஜியம், கரையோர ராஜ்ஜியம், தமிழர் ராஜ்ஜியம் என மூன்று தேசங்களாக ஆளப்பட்டிருந்தது. 1833ம் ஆண்டு ஆங்கிலேயர் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே தேசமாக மாற்றி அமைத்தனர்.
அதன் பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் போது தமிழரின் நாடும் சிங்களவரின் கையில் கையளிக்கப்பட்டுவிட்டது. அதனையே இப்போது நாங்கள் திருப்பிக் கேட்கின்றோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமாக நாங்கள் தொடர்ந்தும் சிங்களவருடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றோம் என்றும் சம்பந்தன் தனது நேர்காணலில் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
 

0 கருத்துக்கள் :