மைத்திரி-ரணில்-விக்கி உறவில் தொடர்ந்தும் விரிசல்!

14.2.16

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கொழும்பின் மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல் தொடர்ந்தும் நீடிப்பதாகவும், தற்போது அது பெரிதாகியுள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் கொள்கை முரண்பாட்டை கொண்டிருந்த விக்னேஸ்வரன், 2015 டிசம்பரில் தமிழ் மக்கள் பேரவையை தோற்றுவித்ததன் பின்னர் அந்த முரண்பாடு வெளியில் தெரியவந்தது.
தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதாகவே இருந்தது.
இந்தநிலையில் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழையாத விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்வதாக இந்திய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆதாரங்களாக, அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்திய நிகழ்வுக்கு விக்னேஸ்வரன் செல்லவில்லை.
அதேநேரம் வடக்குமாகாண ஆளுநர் பளியக்கார பதவி விலகல் நிகழ்வின் போதும் விக்னேஸ்வரன் இரவுபோசனத்தில் பங்கேற்கவில்லை என்பவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்தநிலையில் விக்னேஸ்வரனின் ஆதரவாளரான வடக்குமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக சபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்கொணரவுள்ளதாக கூட்டமைப்பின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துக்கள் :