யோஷித்த ராஜபக்ஷவுக்கு சிறைச்சாலை விதிகள் தளர்வு!

12.2.16

சிறைச்சாலைக் கைதிகள் அனைவருக்கும் பொதுவான கட்டுப்பாட்டு விதிகள் யோஷித்த ராஜபக்ஷ விடயத்தில் முற்றாக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள யோஷித்த ராஜபக்ஷ தற்போது கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் ஏனைய தடுப்புக் கைதிகளை விட சுதந்திரமாக சுற்றித் திரிவதுடன், விசேட ப்(f)பான் வசதி , தூங்குவதற்கான மெத்தை என்பவற்றையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் போதும், மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்படும் போதும் அனைத்துக் கைதிகளுக்கும் கைவிலங்கு மாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது சிறை விதியாகும்.
இந்த விதியும் யோஷித்த விடயத்தில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. கடந்த 11ம் திகதி அவர் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பெயரளவுக்கு கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்ததுடன், அது சாவி கொடுத்து பூட்டப்பட்டிருக்கவில்லை. இதுகுறித்த சமீப காட்சிப்படம் ஒன்று சிங்கள ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
சரிவர பூட்டப்படாத விலங்கு யோஷித்தவின் உள்ளங்கைப் பகுதியில் அழுத்திக் கொண்டிருப்பது குறித்த புகைப்படத்தில் தெளிவாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்றனர். நாட்டின் சட்டங்கள் நபர்களின் செல்வாக்கைக் கொண்டு மீறப்படுவதானது நல்லதன்று என்றும் அவர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.

0 கருத்துக்கள் :