பேத்தியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா

22.1.16

பதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா ஒருவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த குறித்த பிள்ளையின் தாய் குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், தனது பிள்ளையை தனது தந்தையி்ம் ஒப்படைத்து சென்றுள்ளார்.


சந்தேக நபரான 71 வயதுடைய தாத்தாவின் பாதுகாப்பில் வாழ்ந்த 11 வயதான குறித்த சிறுமி சுமார் ஒன்றரை வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் தாத்தா சிறுமியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒன்றரை வருடத்தின் பின் சுகயீனம் காரணமாக நாடு திரும்பிய குறித்த தாய் தனது பிள்ளையை பார்வையிட்ட போது, பிள்ளையின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்த போது, வைத்தியரிடம் குறித்த சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தாய் இன்று வெள்ளிக்கிழமை  பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிறுமி வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதியாகியிருப்பதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.

அத்துடன் சிறுமி மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் சேகரித்துள்ளதுடன் சந்தேக நபரான 71 வயது தாத்தாவை கைது செய்வதற்காக  ஹாலிஎல பொலிஸார் நிலையத்திற்கு அனைத்து ஆவணங்களையும் வழங்க தயாராகவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :