திருடிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி கைது

14.12.15

அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி, அயல்வீட்டுக் குழந்தையின் நத்தார் பரிசுப்பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த டனா ஹேகர் 42 வயதான இப்பெண், இரவு நேரத்தில் அயலவரின் வீட்டுக்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, வீட்டுக் கதவுவரை நடந்து சென்றபின், அங்கு வைக்கப்பட்டிருந்த இரு பொதிகளை எடுத்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏற்றிச்செல்லும் காட்சி கண்காணிப்புக் கெமராவில் பதிவாகியுள்ளது.

அப்பொருட்கள் அவ்வீட்டிலுள்ள 2 வயது குழந்தைக்காக குரியர் சேவையொன்றின் மூலம் அனுப்பப்பட்ட நத்தார் பரிசுப்பொருட்களாகும்.

அக்குழந்தையின் தாய், தனது வீட்டு ஜன்னலுக்கு அருகில் யாரோ நடமாடுவதை உணர்ந்து, கண்காணிப்பு கெமராவை ஆராய்ந்துள்ளார்.

அதன்பின் அக்காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அவர், குறித்த பெண்ணை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு கோரினார்.

இதன் மூலம் டனா ஹேகர் அடையாளம் காணப்பட்டார்.

அவர் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி என்ற தகவலும் தெரியவந்தது.

இப்பெண்  ஏற்கெனவே கடையொன்றில் பொருட்களை திருடியதையடுத்து கடந்த மே மாதம் முதல் நன்னடத்தை கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில் குழந்தையின் பரிசுப் பொருட்களை திருடியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

“டனா ஹேகர், அயலவரின் வீட்டிலிருந்து பொருட்களை திருடியமை அதிர்ச்சியளிக்கிறது. அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது” என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :