போர்க்குற்றவாளிகள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு

29.11.15

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் அடங்கடலான- இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கோ, பாதுகாப்புச் செயலருக்கே முன்னறிவிக்கப்படாமல் இந்தச் சந்திப்பு இரகசியமாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா அதிபர் நீர்கொழுழும்பு சென்றிருந்த போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்ததாகவும், இதில் ஒன்பது மேஜர் ஜெனரல்கள் பங்குபற்றியதாகவும் அவர்களில் பெரும்பாலானோர், இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவப் படைப்பிரிவுகளை வழிநடத்தியவர்களாவர்.
இவர்களில் சிலர் ஓய்வுபெறுவதற்கான 55 வயதை நெருங்கியுள்ளனர்.

இவர்கள் தாம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பகாக சிறிலங்கா அதிபரக்கு விபரித்துக் கூறியுள்ளனர்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை செய்யப்படும் என்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கியுள்ளதன் பின்னணியிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு அவுட்ரீச் விடுதியில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த இராணுவ அதிகாரிகளில், மேஜர் ஜெனரல்கள் ஜெகத் டயஸ், மகிந்த ஹத்துருசிங்க, கமால் குணரத்ன, சவேந்திர சில்வா, நந்தன உடவத்த, பிரசன்ன டி சில்வா, ஜெகத் அல்விஸ், சாஜி கல்லகே உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு இடம்பெற்ற பின்னரே, இதுபற்றிய தகவல்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்குத் தெரியவந்துள்ளது.

அமைச்சர் ஒருவரின் உதவியுடன், பாதுகாப்பு அரமைச்சில் இருந்து முன்னாள் அதிகாரி ஒருவரே இந்தச் சந்திப்புக்கான ஒழுங்கை மேற்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

இதன் போது, உயர்மட்டச் சந்திப்புகளுக்கு முன்னர் இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலரின் அனுமதி பெறப்பட்ட வேண்டும் என்ற நடைமுறை இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 5ஆம் நாள் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில், பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது அதுசார்ந்த ஏனைய உயர் அதிகாரிகளையோ சந்திப்பதற்கு முன்னர், இராணுவ செயலர் ஊடாக இராணுவத் தளபதியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.karunasena-

0 கருத்துக்கள் :