மண் அகழ்வை நிறுத்தக்கோரி குஞ்சுக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

30.11.15

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு செய்யப்படுவதினால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இந்த நிலையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிறவல் மண் அகழ்வை உடனடியாக நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.


மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மாதா கிராமம், மூன்று முறிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை 9 மணியளவில் குஞ்சுக்குளம் ஆலயத்திற்கு முன் ஒன்று கூடினர். பின் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மண் அகழ்வு செய்யப்படும் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு வருகை தந்தனர். அதன் பின்னர் வீதியை இடை மறித்து அமைதியான முறையில் தமது கண்டனக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.


இதன்போது அதிகளவான பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். குஞ்சுக்குளம் பங்குத்தந்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு கலந்துரையாடியதோடு, வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடியதோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அந்த மக்கள் தமது விசனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் கனியவள அகழ்வு திணைக்கள அதிகாரி மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.


இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உரிய அதிகாரிகளையும் அழைத்து வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.


இதன் போது குறித்த பகுதியில் மண் அகழ்வு செய்யப்படுகின்றமையினால் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் சின்ன குஞ்சுக்குளம், தம்பனைக்குளம், புதுக்குளம் போன்ற குளங்களுக்கு செல்லும் மழை நீர் மண் தோண்டப்படும் பள்ளங்களில் தேங்குகின்றது.


இதனால் விவசாய தேவைகளுக்காக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். அத்தோடு, மண் அகழ்வு செய்கின்றமையினால் இக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பல கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.


குறிப்பாக டிப்பர் வாகனங்கள் மண் ஏற்றிக்கொண்டு வேகமாக செல்வதினால் வீதிகள் கடுமையாக சேதத்திற்கு உள்ளாவதோடு மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் மண் அகழ்வு செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதன்போது வருகை தந்த அதிகாரிகள் மண் அகழ்வு செய்யப்பட்டு வந்த இடத்தை நேரடியாக சென்று பார்வையிட்டதோடு தற்காலிகமாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வை நிறுத்துவதாகவும், பின் இவ்விடயம் தொடர்பாக பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :