ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் திருமலை கடற்படை முகாமில்..

22.11.15

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கப்பம் பெறுவதற்காக மாணவர்கள் மற்றும் ஏனைய நபர்களை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேகன் வான் ஒன்று திருகோணமலை கடற்படை முகாமில் இருந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சர்வதேச பாடசாலை ஒன்றில் பயின்ற மாணவன் இங்கிலாந்தில் உயர்கல்வியை தொடர செல்லவிருப்பதை முன்னிட்டு நடத்திய விருந்தின் பின்னர், அதில் கலந்து கொண்ட 6 மாணவர்கள் திரும்பி சென்றுக்கொண்டிருந்த போது இந்த வாகனத்தை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் அப்போது வத்தளை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அந்த மாணவர்கள் பின்னர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்களை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமே திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வாகனத்தை கைப்பற்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கடந்த சில தினங்களாக பெரும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அதற்கு கடற்படை முகாமில் அதிகாரிகள் பெரும் தடையை ஏற்படுத்தினர்.
இதனையடுத்து, குற்றம் செயலுடன் சம்பந்தப்பட்ட வாகனம் ஒன்றை மறைத்து வைத்துள்ளதாக கடற்படை தளபதிக்கு தெளிவுப்படுத்திய பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அந்த வாகனத்தை கைப்பற்றினர்.

கடத்தல் சம்பவத்தின் பின்னர், கடற்படை வாகன இலக்கத்தில் திருகோணமலை கடற்படை முகாம் அதிகாரிகள் அதனை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்த செல்வந்த குடும்பங்களின் பிள்ளைகள் உட்பட 28 பேர் 2010 ஆம் ஆண்டில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கடற்படை புலனாய்வுப் பிரிவின் விசேட பிரிவில் சேவையாற்றிய சிலர் கப்பம் பெறும் நோக்கில் இந்த 6 மாணவர்களை கடத்திச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், இந்த மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அன்றைய கிழக்கு மாகாணத்திற்கான கடற்படை கட்டளை தளபதியாக செயற்பட்ட வைஸ் அத்மிரல் ஜயந்த கொலம்பகே, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளார்.

0 கருத்துக்கள் :