பரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி கொல்லப்பட்டார்

19.11.15

சென்ற் டெனிஸில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டவர்களில் ஒருவராக, பரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரி என நம்பப்படும் அப்டெல்ஹமிட் அபாவுட் இனங்காணப்பட்டுள்ளதாக பரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இவரது உடலானது துப்பாக்கிச் சன்னங்களாலும் வெடிகுண்டுச் சிதறல்களாலும் துளைக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு பரிஸ் புறநகர்ப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பதேழு வயதான பெல்ஜியப் பிரஜையான இவர், அவரது கைவிரல் அடையாளங்களின் மூலமே அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரஞ்சுத் தலைநகர் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டு, தற்கொலைத் குண்டுத்தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்டும் 350க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
இதையடுத்து, அபாவுட், பரிஸில்தான் இருக்கின்றார் என்ற துப்பு பொலிஸாருக்கு கிடைத்தையடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பொலிஸார் நுழைந்தபோது, அபாவுட்டின் மைத்துனி எனக் கூறப்படுகின்ற பெண், தன்னை வெடிக்கவைத்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, பெல்ஜியத்துக்கு பயணமாகி விட்டார் என்று நம்பப்படுகின்ற சாலா அப்டெஸ்லாம், இன்னும் தேடப்பட்டு வருகின்றார்.

0 கருத்துக்கள் :