பிரபாகரன் என்ன நிலையில்..! வாய் திறந்தார் கே.பி.

3.9.15

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி தோண்டித் தேடுவதனை விடவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குமரன் பத்மநாதன் பிரபாகரனுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் தொடர்பு பேணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரனின் இறப்பு பற்றி துல்லியமாக கூற எவராலும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பிரபாகரனுடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலருடன் தாம் தொடர்பு கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொண்டிருந்தபோதிலும் நந்திகடல் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எவரும் உயிருடன் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என தற்போது கூறுவது சாத்தியப்படாத விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தம் காரணமாக இலங்கையர்கள் பாரியளவில் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமே அதிகளவு தொடர்புகளைப் பேணி வந்ததாகவும், தம்மாலேயே பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது என்பதனை குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் இல்லமொன்றை தன்னார்வ அடிப்படையில் நடத்திச் செல்வதாகவும் அதற்காக நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக அரசியல் தேவைகளுக்காக தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :