கலப்பு நீதி பொறிமுறையை உருவாக்க அமெ. அழைப்பு

21.9.15

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு வெளியாகியுள்ளது.
இதில், போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு இலங்கை அரசிடம் கோரப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இழைக்கப்பட்ட மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டே, அமெரிக்காவும் அதன் சக நாடுகளும் தீர்மான வரைவில் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றன.
இலங்கை மீதான புதிய தீர்மானம் தொடர்பில் நாளை ஜெனிவாவில் நடக்கவுள்ள முதலாவது முறை சாராக் கூட்டத்தில் இந்த வரைவு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் சபை அலுவலகத்தில் வரைவு விவாதத்துக்காகச் சமர்ப்பிக்கப்படும். எதிர்வரும் 30ஆம் திகதியளவில் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு பக்கங்களில், 26 பந்திகளைக் கொண்ட இந்த வரைவின் பிரதி கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்மான வரைவு அமெரிக்கா தலைமையில், பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வரைவின்படி, அதில் கூறப்படும் விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கண்காணித்து பரிந்துரைகளின் முன்னேற்றம், மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து,  2016 செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் 33ஆவது அமர்வில் வாய்மூல அறிக்கையை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தற்போதைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, முன்னேற்றங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை, 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ள,  சபையின் 34ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மான வரைவு கோரியுள்ளது.

0 கருத்துக்கள் :