ரோஹன விஜேவீர கொலை குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

21.9.15

ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹன விஜேவீர கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது மனைவி சித்ராங்கனி விஜேவீர, பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார்.

விஜேவீர கொலை செய்யப்பட்டு 26 வருடங்களின் பின்னர் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் மக்கள் முறைப்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அண்மையில் சித்ராங்கனியிடம் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி ரோஹன விஜேவீர உயிரிழந்தார்.
விஜேவீரவின் மரணத்தைத் தொடர்ந்து குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் திருகோணமலை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாம்களில் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் தற்போது நிலவி வரும் சமூக சூழ்நிலை காரணமாக வெலிசறை கடற்படை முகாம் வீட்டிலிருந்து எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி வெளியேறுமாறு எழுத்து மூலம் விஜேவீர குடும்பத்திற்கு அறிவித்துள்ளதாக கடற்படைத் தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, விஜேவீர குடும்பத்தை பராமரித்து வருவதாகவும் தொடர்ந்தும் பராமரிக்கத் தயார் எனவும் ஜே.வி.பி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :