உள்ளக விசாரணையை ஐ.நா நிராகரித்தமை வரவேற்கின்றோம்

18.9.15

இலங்கையில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் மூலமாக குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட முடியாது என்பதனை  தீர்க்கமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமையை நாம் வரவேற்கிறோம் என சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் 22 சிவில் அமைப்புக்கள் வெள்ளிக்கிழமை (18) அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் இலங்கை தொடர்பாக கடந்த 16ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் வரவேற்கின்றோம். ஐ.நா மனித உரிமை பேரவைக்கு விசாரணைக்கான தரவுகள் சேகரிப்பதற்கு கொடுக்கப்பட்ட  ஆணைக்குட்பட்ட காலப் பகுதியாகிய பெப்ரவரி 2002க்கும் நவம்பர் 2011க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான தரவுகளை ஆழமாக முன்வைக்கும் அறிக்கையாக இது இருக்கின்றது.

இலங்கையில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் விரும்பும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அறிக்கை இது என நாம் கருதுகிறோம். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பங்காளிகளான அனைத்து தரப்பினரும் உள்நோக்கியும் விமர்சனப் பார்வையுடனும் சுயதேடல் செய்வதற்கு அவசியமான ஒரு மூலவளமாக இவ்வறிக்கை இருக்கும் என நாம் நம்புகிறோம்.

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் குற்றவியல் நீதிமன்ற விசாரணை சாத்தியம் இல்லை என்பதற்கு 30 வருடகால யுத்தம் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சிதைவடைந்தும் கறைபடிந்தும் போயுள்ளமை மட்டும் காரணமன்று. மாறாக, அவ்விசாரணையை கொண்டு நடத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படும் அரசியல் விருப்பு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்திடமும்; இல்லாமையே உள்நாட்டுப் பொறிமுறை மூலம் குற்றவியல் நீதிமன்றவிசாரணை சாத்தியம் இல்லை என்பதற்கான முக்கிய காரணமாகும்.

கடந்த 14ஆம் திகதி அன்று ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தம்மீது நம்பிக்கை வைக்குமாறு வினயமாக உறுப்பு நாடுகளைக் கோரியிருந்தார். ஆனால் தாம் நடத்தும் உள்நாட்டு விசாரணை மூலம் இலங்கையின் இராணுவத்தின் நற்பெயரை காப்பாற்றுவோம் என அவர் அதே உரையில் தெரிவித்ததன் மூலம் தம் மீது நம்பிக்கை வைக்கும் வண்ணம் அவர் கோரியமையின் உண்மைத்தன்மை இல்லாமல் போயிற்று.

இத்தகைய சூழலில்வில்தான் நாம் ஜெனீவா அறிக்கையின் கலப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையை கவனத்தில் கொள்கிறோம்.

கருத்தளவில் கலப்புமுறையின் பொருத்தப்பாடு தொடர்பாக நாம் இப்போது நிலைப்பாடெடுப்பது அவசியமற்றது. ஜெனீவா அறிக்கை கூறுவது போன்று எந்தவொரு பொறிமுறையும் பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துபேசி அவர்களின் பங்குபற்றுதலுடன் இப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதால் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் தனது முன்மொழிவுகளை பகிரங்கமாக முன்வைக்கும் போது நாம் எமது கருத்துக்களை முன்வைப்போம்.

ஓர் கலப்பு பொறிமுறை உண்மையிலேயே கலப்பு முறையாக இருப்பதற்கு வெறுமனே வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் நியமிக்கப்படுவது போதுமானதன்று. அப்பொறிமுறையானது பகுதியளவில் தானும் ஐ.நாவால் தலைமை தாங்கப்படுவதாகவும் சர்வதேச சட்ட ஆணையின் அடிப்படையிலானதாகவும் இருக்கவேண்டும்.

உள் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளை இலங்கை அரசாங்கம் நியமிப்பதானது கலப்பு பொறிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. முன்வைக்கப்படும் எந்தவொரு கலப்புப் பொறிமுறையிலும் அதன் சர்வதேச பங்களிப்பானது உள்ளக பங்களிப்பை விட மேலோங்கியதாகவும் முதன்மையானதாகவும் இருக்க வேண்டும்.

இதுவே, இலங்கையில் இடம்பெறக்கூடிய நியாயமான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான குறைந்த பட்ச தகுதியாக இருக்க வேண்டும். அல்லாவிடில் கலப்பு பொறிமுறையின் நம்பகத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இறுதியில் கலப்புப் பொறிமுறையின் சர்வதேச அங்கம் மீயுர்வானதாக இல்லாதவிடத்து எக்காரணங்களுக்காக உள் பொறிமுறையை ஜெனீவா அறிக்கை நிராகரிக்கிறதோ அதே காரணங்களுக்காக கலப்புமுறையையும் நிராகரிக்கவேண்டிய நிலை உருவாகலாம்.

 மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்கள் அரைகுறையானதொரு முயற்சி மூலம் ஏமாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தை ஏற்றுக்கொண்டு அந்த நீதிமன்றில் இலங்கை இணைந்து கொள்ள வேண்டும் என்ற அறிக்கiயின் பரிந்துரையை நாம் வரவேற்கிறோம். இலங்கை அவ்வாறாக அச்சாசனத்தில்; இணைந்து கொள்ளும் போது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கான நியாயதிக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வழங்கும் வகையில் ஒரு பிரகடனத்தையும் தாக்கல் செய்யவேண்டும் என நாம் கருதுகிறோம். பொறுப்புக்கூறல் தொடர்பான நியாயமான கரிசனையை வெளிப்படுத்துவதற்கு இது உதவும்.

மேலும் அறிக்கையின் நிலைமாறு நீதி தொடர்பிலான விரிவான பரந்துபட்ட அனைத்து பரிந்துரைகளையும் நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம். குறிப்பாக காணாமல் போகச் செய்யப்பட்டோர், காணி விடுவிப்பு மற்றும் படையினரை விலக்கிக் கொள்ளல் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

மேலும், ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் குறிப்பிட்டுள்ளவாறு நிலைமாறு நீதி தொடர்பிலான செயன்முறையானது பாதுகாப்புத்தரப்பை மறுசீரமைத்தல், சுயாதீனமான உண்மையை கண்டறியும் முறைமையை ஸ்தாபித்தல் மற்றும் நட்டஈடுகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்திட்டத்தை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு அங்கங்களை கொண்டதாக இருக்கவேண்டும். இவை பாதிக்கப்பட்ட மக்களின் பங்குபற்றலோடு உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இவை எவையுமே குற்றவாளிகளை நீதிமன்ற குற்றவியல் செயன்முறைக்கு முன்கொண்டுவரும் செயன்முறைக்கு மாற்றீடானவை அல்ல என்பதையும் முழுமையான நிலைமாறு கால நீதிமுறையின் ஓர் அங்கம் என்ற வகையில் நீதிமன்ற விசாரணைக்கு அணிசேர்க்கும் வகையிலானதாகவே இந்த ஏனைய முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதனையும் வலியுறுத்தி கூறுகின்றோம். 

மேலும், ஜெனீவா அறிக்கையானது ஒடுக்கு முறைக்கு காரணமான கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் இலங்கையில் நிலவுகையில் இருப்பதை சுட்டிக்காட்டுவதை நாம் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். இக்கட்டமைப்புக்கள் நீக்கப்பட்டால் அன்றி தொடர்ந்து குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது. அறிக்கை குற்றங்கள் தொடர்ந்து நிகழ்காலத்திலும் நிகழ்வதைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்து இலங்கை தொடர்பில் தனது கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையில் ஜெனீவா அறிக்கை முழுமையாக அதன் சொல்லிலும் அர்த்தத்திலும் வெளிப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐ.நா அங்கங்களும், உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுகொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணச் சிவில் சமூகம், மனித உரிமைகள் அபிவிருத்தி மையம், மனித உரிமைகள் இல்லம், வவுனியா சிவில் சமூகம், மன்னார் சிவில் சமூகம், தமிழ் சட்டத்தரணிகள் அமையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வன்னி கிறிஸ்தவ ஒன்றியம், மட்டக்களப்பு மாற்றத்துக்கான ஸ்தாபகம், கிழக்கு சிவில் சமூகம் செயற்பாட்டு இணையம், மட்டக்களப்பு சமூக சேவையாளர் வலையமைப்பு, படுவன்கரை மக்கள் இணையம், வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம், மன்னார் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு, காரைதீவு இந்து அபிவிருத்திச் சமூகம்,

தமிழர் வாழ்வுரிமை மையம், வலிகாமம் வடக்கு அபிவிருத்திச் சபை திருகோணமலை மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மையம், சமாதானம், நீதிக்கான கத்தோலிக்க மறை ஆணையகம்,

காணாமற்போனோரின் உறவுகளின் வடக்கு, கிழக்குக்கான இணைப்பு அமையம் ஆகிய 22 சிவில் அமைப்புக்கள் இணைந்தே இவ்வாறு அறிக்கை அனுப்பியுள்ளன.

0 கருத்துக்கள் :