ஜெனிவாவில் இலங்கைக்கு பெரும் சர்வதேசச் சவால்

14.9.15

ஜெனிவா மனித உரிமை சபை அமர்வில் முன் வைக்கப்படும் போர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கைக்கு முகம் கொடுப்பதற்கு எதிர்வரும் நாள்களில் இலங்கை அரசு மிகப்பெரும் சர்வதேச சவாலை எதிர்நோக்கும் என்று இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இந்த சவாலை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசு இரு முனைகளில் முயற்சிகளை எடுத்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா. மனித  உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல் தொடர்பிலான விசாரணை அறிக்கை அடுத்த வரும் நாள்களில் மனித உரிமை சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விசாரணை அறிக்கையில், இலங்கையில் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளும் அரச படைகளும் பெரியளவில் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது. அதனால் அடுத்து வரும் தினங்களில் ஜெனிவாவில் இலங்கை அரசு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இலங்கை அரசு இரு முனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் ஜெனிவாவுக்கு வந்துள்ள அமைச்சர் ராஜித சேனரட்ண மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர், மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மறுமுனையில் புதுடில்லிக்கு செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்காவால் இலங்கை அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளார்.

ஐ.நா மனித உரிமை சபையில் முன் வைக்கப்படும் குற்றச்சாடிலிருந்து அமெரிக்கா, இந்தியாவின் ஆதரவுடன் இலங்கை தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :