தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு சாதகமான சூழல்: ரணில்

24.8.15

பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய அரசமைப்பை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கருதுகின்றனர், எனினும்தாம் ஆறு மாதத்தினுள் அது சாத்தியமாகும் என கருதுகின்றோம்.

புதிய தேர்தல் முறையே பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகிறது.

ஜனாதிபதி முறைமை குறித்தும் பிரச்சினைகள் காணப்படுகிறது, பிரஜைகள் குழுவினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இதனை எதிர்க்கின்றது, ஆகவே இதனை நாங்கள் முற்றாக ஆய்வு செய்யவேண்டிய நிலையில் உள்ளோம், பாராளுமன்றத்தை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்து ஆராயவேண்டும்.

மாகாணசபைகள் குறித்தும் நாங்கள் ஆராயவேண்டும் அவை எவ்வாறு செயற்படுகின்றன எனவும் பார்க்கவேண்டும், இவையே எங்கள் முன் உள்ளவிவகாரங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே இடம்பெற வேண்டும் என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம், ரோம் பிரகடனத்தில் நாங்கள் கைச்சாத்திடாததே இதற்கு காரணம்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் இலங்கைக்குள் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிஅடிப்படை இல்லை என்பதை தெரிவித்து வந்துள்ளோம், நீதித்துறையில் நம்பிக்கை இழந்ததன் காரணமாகவே பலர் சர்வதேச விசாரணையை கோரினர்.

வடக்கிலும் தெற்கிலும் முன்னர் இந்த பிரச்சினைகள் காணப்பட்டன, நாங்கள் எங்கள் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட உள்நாட்டு பொறிமுறையொன்றை முன்வைக்க முயல்வோம்.

அதேவேளை அது இலங்கையின் சகல சமூகங்களிற்கும், சர்வதேச சமூகத்தினரிற்கும் ஏற்புடையதாக காணப்படும்.என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :