மீண்டும் குறிவைக்கும் சீனா

2.8.15

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுது பார்க்கும் தளத்தை (டொக்யார்ட்) அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்கு சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன என்பதற்கு ஆதாரமாக அமைந்திருக்கின்றன.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட, இந்த யோசனைக்கு, கடந்த 22ம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சர்ச்சைகள், சந்தேகங்கள் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சீனாவின் திட்டமொன்றுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் இரண்டு விதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து நிற்கிறது.
முதலாவது – இதன் மீதான சீனாவின் செல்வாக்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகளினதும், இந்தியப் பெருங்கடல் மற்றும் சர்வதேச கடல் போக்குவரத்து பாதையினதும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்ற சர்ச்சை.
அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்கும் வாய்ப்புக்காக இந்தியாவை நாடிய போது, அதனை உதறித் தள்ளியது புதுடில்லி. ஆனால், சீனா அதனைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கைக்குள் வேகமாக ஊடுருவி ஆதிக்கம் செலுத்திய போது இந்தியா கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் துறைமுகம் முற்றிலும் வணிக நோக்கம் கொண்டது என்று இலங்கையும், சீனாவும் அவ்வப்போது வலியுறுத்தி வந்தாலும், அது இராணுவ நோக்கத்துக்காக சீனாவினால் பயன்படுத்தப்படக் கூடுமோ என்ற கவலை இந்தியாவுக்கு இருக்கிறது.
அதனால், அம்பாந்தோட்டைத் துறைமுக விரிவாக்கத் திட்டங்களை முடக்குவதற்கு முயற்சித்து தோல்விகளைச் சந்தித்தது இந்தியா.
இரண்டாவது- அம்பாந்தோட்டையில், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மாகம்புர துறைமுகம், வர்த்தக ரீதியாக இலங்கை அரசாங்கத்துக்கு இன்று வரையில் இலாபமீட்டும் ஒன்றாக அமையவில்லை என்ற குற்றச்சாட்டு.
இந்த துறைமுகத்தை அமைப்பதற்காக அரசாங்கம் சீனாவிடம் பெற்ற கடனுக்காக ஆண்டுதோறும், 2,200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலுத்தி வருகிறது. 2, 208 மில்லியன் ரூபா, 2012 ஆம் ஆண்டிலும், 2,479 மில்லியன் ரூபா, 2013 ஆம் ஆண்டிலும், 2,233 மில்லியன் ரூபா, 2014 ஆம் ஆண்டிலும் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
அதனைக்கூட இந்த துறைமுகத்தினால் ஈடுகட்ட முடியாதிருக்கிறது. இருந்தாலும், இந்த துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. இது நிறைவு பெற்றால் ஒரே நேரத்தில் 33 கப்பல்கள் தரித்து நின்று பொருட்களை ஏற்றி இறக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்.
ஆனால், அதற்கு அந்தளவு கப்பல்கள் வரவேண்டுமே என்பது தான் பிரச்சினை.
இத்தகைய சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தான் கப்பல்களை கட்டும், பழுதுபார்க்கும் தளத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்திருக்கிறது சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம்.
இது சீன அரசத்துறை நிறுவனமான சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தின் ஓர் அங்கமாகும்.
அது உலகெங்கும் 80 நாடுகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று.
சீன அரச நிறுவனமான இது, சீனாவின் பொருளாதார நலன்களுக்கு அப்பால், பாதுகாப்பு நலன்களை அடைவதற்கான ஒரு கருவியாகவும் பீஜிங்கினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியப் பெருங்கடல் வழியாக பயணம் செய்யும் கப்பல்கள், இலகுவாக எரிபொருள் நிரப்பிக் கொள்ளத்தக்க இடத்தில், கிழக்கு மேற்கு கப்பல் பாதைக்கு மிக அருகாக அமைந்திருப்பதால், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அதிகளவு கப்பல்கள் வரும் என்றும், அவற்றுக்கு எரிபொருள் விநியோகம் செய்தே, அதிக இலாபமீட்டலாம் என்றும், சீன நிறுவனம் இலங்கைக்கு ஆசை காட்டியிருந்தது.
ஆனால், இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், சர்வதேச கடற்பாதையில் பயணிக்கும் கப்பல்களை ஈர்க்க முடியவில்லை. இந்தநிலையிலேயே, கப்பல்களைக் கட்டும், பழுதுபார்க்கும் தளத்தை அமைத்தால், இங்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்திருக்கிறது சீனா.
ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும், இலங்கையின் பல பகுதிகளிலும் திட்டங்களை நிறைவேற்றும் ஆணை பெற்ற, சீனாவின் பொறியியல் கட்டுமான நிறுவனமே, இந்த யோசனையை முன்வைத்திருந்தது.
இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இலங்கை அரசாங்கம், இடைநிறுத்தி வைத்து நான்கு மாதங்களாகியுள்ள நிலையில் தான், அதே நிறுவனத்தின் புதிய திட்டம் குறித்து சாத்திய ஆய்வை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சாத்திய ஆய்வுக்கு 12 மாத கால அவகாசம் கோரியிருக்கிறது சீன நிறுவனம்.
அந்த சாத்திய ஆய்விலேயே, இந்தக் கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும், அதனை எவ்வாறு ஈடுகட்டலாம், அந்த தளத்தை எப்படி முகாமைத்துவம் செய்யலாம் என்பன போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
எவ்வாறாயினும், சீன நிறுவனம் இந்த கப்பல் கட்டும் தளத்தை, தாமே நிர்வகிக்கும் ஒரு திட்டத்தையே அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறது.
சீனாவின் திட்டங்கள் தொடர்பாக கடும்போக்கை வெளிப்படுத்தி வந்த, இலங்கை அரசாங்கம் இப்போது, தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்திருக்கிறது.
அண்மையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். சீனாவின் புதிய முதலீடுகளுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக அவரது உரை அமைந்திருந்தது.
அதுமட்டுமன்றி, ஏற்கனவே சீன நிறுவனத்துடன் இணைந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும், ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டமும் கூட, பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மீளத் தொடங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய கட்டத்தில் தான், அம்பாந்தோட்டைத் துறைமுகம் மீதான சீனாவின் கவனம் இன்னமும் கலையவில்லை என்பதை உணர்த்தும் வகையில், அங்கு கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்தியாவிடம் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
ஆனால், அம்பாந்தோட்டையில், இலங்கை கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகங்கள் பலவும் தவறாக செய்திகளை வெளியிட்டிருந்தன. அமைச்சரவைப் பத்திரத்தில் Naval Dockyard என்ற குறிப்பிடப்பட்டிருந்ததை, இந்திய ஆங்கில ஊடகங்கள் சில, கடற்படைத் தளங்கள் என்ற தவறாக அர்த்தம் கொண்டு செய்தி வெளியிட்டன.
எனினும், அது கப்பல் கட்டும் தளம் என்பதையும், அதனை சீனாவே கட்டி நிர்வகிக்கப் போகிறது என்ற செய்தியும் இந்தியாவுக்கு இனிப்பான செய்தியாக இருக்காது என்பது உண்மை.
ஏற்கனவே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மீது சீனாவுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் விடயத்தில் இந்தியாவுக்கு அதிருப்தி உள்ளது.
அதைவிட, சீனாவின் முதலீட்டில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுமாறும், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் புதுடில்லியில் வைத்து தன்னிடம் கூறியதாக அண்மையில், தகவல் வெளியிட்டிருந்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச. அந்தளவுக்கு சீனாவின் திட்டங்கள் குறித்து இந்தியா விழிப்புடன் இருக்கிறது.
தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் இலங்கை வழியாக வந்து விடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது.
ஏற்கனவே, திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய, சீனக்குடாவில், சீனாவின் வான் பொறியியல் நிறுவனம், விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை அமைக்க முயற்சித்தமை நினைவில் இருக்கலாம்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கு கிட்டத்தட்ட ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தான், புதுடில்லியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
அப்போது புதுடில்லி சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீனக்குடாவில் சீன நிறுவனம் கால் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இந்திய – இலங்கை உறவுகளில் சீரற்ற நிலை தோன்ற அதுவும் ஒரு காரணம்.
கடைசியில், வேறு வழியின்றி, சீனக்குடாவில் விமானங்களைப் பழுதுபார்க்கும், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற முடிவு மஹிந்த ராஜபக்ச அரசினால் எடுக்கப்பட்டது.
அந்த திட்டத்தை, ஹிங்குராங்கொட விமானப்படைத் தளத்தில் செயற்படுத்துமாறு சீனாவிடம் கேட்டது இலங்கை அரசாங்கம். அதற்குப் பின்னர், அந்த திட்டம் பற்றியே சீனா வாய் திறக்கவில்லை.
இந்தநிலையில் தான், சீனா அம்பாந்தோட்டையில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் திட்டத்துடன் வந்து நிற்கிறது.
இதற்கு மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது.
சீன நிறுவனம் சமர்ப்பிக்கப் போகும் சாத்திய ஆய்வு அறிக்கை மட்டுமே, இந்த கப்பல் கட்டும் தளத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்க ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இந்தியாவின் கண்ணசைப்பும் அதற்குத் தேவைப்படும்.
ஹரிகரன்

0 கருத்துக்கள் :