மஹிந்தவின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் பொது பல சேனா

11.8.15

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுமத்திய குற்றச்சாட்டுக்களை  ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தன்னை பதவி கவிழ்க்க பொது பல சேனா இயக்கம் துணை நின்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும். தன்னை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கு சர்வதேச சக்திகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பே பொதுபல சேனா எனவும் அவர் குறிபிட்டிருந்தார்.

நோர்வே நிதியுதவியுடன் பொது பல சேனா அமைப்பு இயங்கி வருவதாகவும் இதுதொடர்பிலான விபரங்கள் அடங்கிய நூல் ஒன்று சந்தையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பொது பல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் வெற்றிக்காக அர்ப்பணிபுடன் செயற்பட்ட தமக்கு மஹிந்த தெரிவித்த பாராட்டாகவே இதனை கருதுவதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், தாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்டதாக அவர் சுட்டிக்ககாட்டியுள்ளார்.

வெளிநாட்டு உதவிகள் எதனையும் பொது பல சேனா பெறவில்லை என்பதனை நிரூபிக்க பல சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்த மஹிந்த சிலரின் தவறான வழிநடத்தல்களினால் பிழையான பாதையில் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடிக்க சந்தர்ப்பம் இருந்த போது, நாம் செய்த சூழ்ச்சியின் காரணமாகவா மஹிந்த முன்கூட்டியே தேர்தல் நடத்தி தோல்வியைத் தழுவினாரா? என ஞானசார தேரர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துக்கள் :