சனல் 4இல் வெளியான ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல!

9.8.15

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கெலும் மைக்ரே மறுத்துள்ளார்.

'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின் தயாரிப்பாளரான ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தைப் பதிவு செய்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியில் கெலும் மைக்ரே தெரிவித்த - கசிய விடப்பட்ட ஆவணம் திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு எனவும், பின்னர் அந்தச் சம்பவம் தொடர்பில் சில பகுதிகளில் மட்டுமே உண்மை இருக்கின்றது எனவும் சுமந்திரன் கடந்த தேர்தல் பரப்புரை  மேடைகளில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தனது செய்தியில் எந்த வகையான திரிவுபடுத்தலும் இல்லை என்றும்,அந்தச் செய்தி நூறுவீதம் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

கசிய விடப்பட்ட ஆவணம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், அந்த விசாரணையைத் புறம்தள்ளுவதுதான் இங்கு பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, விசாரணையை மேற்கொள்ளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்தான் இந்த உள்ளக விசாரணையை வழிநடத்தும் எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ஜெனிவாவைப் புறம் தள்ளிவிட்டு நியூயோர்க் மற்றும் கொழும்பு ஐ.நா. அலுவலகங்கள் செயற்படுகின்றனவா எனத் தான் கேள்வி எழுப்புவதாகவும் கெலும் மைக்ரே தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துக்கள் :