மைத்திரியின் யோசனைக்கு மகிந்த 'ஆப்பு'

20.7.15

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கம் தேசிய ஒருமைப்பாட்டு அரசாகவே அமையுமென நாட்டின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும்  நிலையில், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  நிராகரித்திருக்கிறார்.

  தேர்தலில் தோல்வி காத்திருக்கும் நிலமையிலேயே தேசிய அரசாங்கம் அமைப்பதை ஐக்கிய தேசியக் கட்சி நினைவு கூர்ந்து வருவதாக ராஜபக்ஷ கூறியுள்ளார். 

கல்கமுவவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே மகிந்த ராஜபக்ஷ அந்த யோசனையை நிராகரித்திருக்கிறார். யுத்த காலப் பகுதியில் தேசிய அரசாங்கம் அமைப்பதை ஐ.தே.க. விரும்பியிருக்கவில்லையெனவும் அச் சமயம் தேசிய அரசு தேவைப்பட்டதாகவும் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஆகஸ்ட்  17 இல் இடம்பெறவுள்ள தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஐ.தே.க. போதிக்கிறது என்றும் அவர் சாடியிருப்பதுடன்  ஐ.ம.சு.மு.  ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க வேண்டுமெனத் தான் விரும்புவதாகவும் தேர்தலில் பெரும்பான்மை  ஆசனங்களை ஐ.ம.சு.மு. வென்றெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஆயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் அதனைத் தலைமைக் கட்சியாகக் கொண்ட ஐ.ம.சு.மு. வினதும் தலைவராக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவே இருந்து வரும் நிலையில், தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கமே அமைக்கப்படுமென அவர் தெரிவித்திருக்கிறார்.
எந்தக் கட்சி அதிக ஆசனங்களை தேர்தலில் பெற்றுக் கொள்ளுமோ அக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராகவும் அடுத்த பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சியைச் சேர்ந்தவர் துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டு தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பதே தனது யோசனையென ஜனாதிபதி  குறிப்பிட்டிருந்தார்.

  கடந்த ஜனவரி 8  ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் ஆட்சி அமைக்கக் கூடிய  பெரும்பான்மைப் பலத்தை இரு பிரதான கட்சிகளும் பெற்றுக் கொள்வது கடினமானதென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்  113 ஆசனங்களை இரு பிரதான  கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியோ அல்லது சு.க.வை உள்ளடக்கிய ஐ.ம.சு.மு.வோ பெற்றுக் கொள்ளத் தவறி தொங்கு பாராளுமன்றம் அமையும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் இரு  பிரதான கட்சிகளும் ஏனைய சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்படக் கூடும் அல்லது இரு பிரதான கட்சிகளும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படக் கூடுமெனவும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

0 கருத்துக்கள் :