எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சரணடையச் சொல்லவில்லை: கனிமொழி

7.6.15

தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார்.

 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.

இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது' என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு கனிமொழி எம்.பி கூறியுள்ளார். 'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாடியிருந்ததாக, இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றின் போதும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் சாட்சியளிக்கும் போதும், அனந்தி கூறியிருந்தார்.

அனந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளித்துள்ள கனிமொழி எம்.பி, 'எனக்கு சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், அவர் எல்.ரீ.ரீ.ஈ.யின் முன்னணி தலைவர்களில் ஒருவர் அல்ல. செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது.

யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துக்கள் :