மகிந்தவிடமிருந்து பசிலைப் பிரிப்பதற்கு தீவிர முயற்சி

23.6.15கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பிணையில் விடுதலையாகிய பசில்  ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்வதே இந்தச் சந்திப்பின்  நோக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திரக் கட்சியில் மகிந்த தரப்பினருக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கத்தில் பசில் ராஜபக்ஷவை இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல்  தகவல்  வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இச்சந்திப்பின் போது இரண்டு  மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில்,  இந்தச் சந்திப்பில் லசந்த அழகியவண்ணவும் இணைந்துகொண்டுள்ளார்.

  எனினும் இச்சந்திப்பின் முடிவுக்கமைய பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும்  நாட்களில்  விரைவில் முடிவெடுக்கப்படுமெனத்  தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மைத்திரி தரப்பினரின் யோசனைக்கு முன்னாள்  அமைச்சர் இதுவரை எவ்வித பதிலும்  வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை  'பழைய நண்பராக' அவர் இருப்பதால் தான் சென்று சந்தித்ததாக அமைச்சர் சேனாரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலையானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை ராஜித சேனாரட்ன அவரைச் சென்று பார்வையிட்டார்.
அவருடன் கம்பஹா மாவட்ட எம்.பி. லசந்த அழகியவண்ணவும் உடன் சென்றிருந்தார். ஏப்ரல் 22 இல் திவிநெகும திணைக்களத்தில் நிதிமோசடி இடம்பெற்ற குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ஷ கைதாகியிருந்தார்.
ஆயினும் உடல்நலக் காரணங்களினால் அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 15 ஆம் திகதி பிணையில் விடுதலையான பசில் ராஜபக்ஷ, பின்னர் கொழும்பு டேடன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :