காதல் திருமணம் செய்து ஈழப் பெண்ணை கைவிட்ட அதிமுக பிரமுகர்: மந்திரி என் பக்கம் என மிரட்டல்

26.6.15

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் உள்ள சானார்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளரான நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த கருணாகரன். அப்பகுதியில் உள்ள தோட்டநுத்து அகதிகள் முகாமில் வசித்து வரும் ஈழத் தமிழரான லதா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.


கருணாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, துளசி என்ற மனைவி உள்ளார். துளசி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். துளசிக்கு குழந்தை இல்லை என்பதால் 2வது திருமணம் செய்ததாக கூறி வந்தார். லதாவும், கருணாகரனும் திண்டுக்கல் டவுனில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.


இந்தநிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி இலங்கை சென்று திரும்பிய லதா, வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. வீட்டில் உள்ள பொருட்களும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, கருணாகரனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கருணாகரன் தன்னை கைவிட முடிவெடுத்துவிட்டதாக அறிந்த லதா, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறியுள்ளார். கருணாகரனால், தான் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் லதா தெரிவித்துள்ளார்.


இதையடுத்து சீமான் அறிவுரைப்படி சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் லதா இதுதொடர்பாக புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு திண்டுக்கல் புறநகர டிஎஸ்பி வனிதாவுக்கு உத்தரவிடப்பட்டது.


டிஎஸ்பி வனிதா பாதிக்கப்பட்ட லதாவிடம் ஒரு வாரம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த கருணாகரன் புதன்கிழமை இரவு திண்டுக்கல் திரும்பினார். அவரை டிஎஸ்பி அலுவலத்திற்கு அழைத்து வந்த போலீசார் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லதா கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்தார். லதாவிடம் பணம், நகைகளை வாங்கியதாக ஒப்புக்கொண்ட கருணாகரன், லதாவின் கர்ப்பத்துக்கு தான் காரணம் இல்லை என்று கூறியுள்ளார்.


இதனையடுத்து மீண்டும் லதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் மருத்துவ பரிசோதனைக்கு தயார் என்று லதா அழுதார். இதனால் கருணாகரனை மீண்டும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய லதா, என்னை திருமணம் செய்த கருணாகரன் என்னிடம் இருந்து பல லட்ச ரூபாய்களை பெற்றுள்ளார். 20 பவுன் தங்க நகைகளை பெற்றுள்ளார். திண்டுக்கல் டவுனில் தனியாக குடும்பம் நடத்தி வந்தோம். நான் இலங்கை சென்று திரும்பி வந்து பார்த்தபோது தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. உள்ளே பார்த்தபோது பொட்கள் எதுவும் இல்லை. இதில் அதிர்ச்சி அடைந்த நான், கருணாகரனுக்கு போன் செய்தேன். அப்போது அவர், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி எனக்கு போன் செய்யாதே. உன்னால் முடிந்ததை பார். எனக்கு மந்திரியும், மந்திரி மச்சான் கண்ணனும் பக்க பலமாக இருக்கிறார்கள். என்னை ஒண்ணும் பண்ண முடியாது என்றதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது கர்ப்பத்துக்கு கருணாகரன் தான் காரணம். அதனை அவர் மறுப்பதால், மருத்துவ பரிசோதனைக்கும் நான் தயார் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கண் கலங்கினார்.


சக்தி

0 கருத்துக்கள் :