குடும்பங்கள் வறுமையில்!நாங்கள் சிறையில்! அரசியல் கைதிகள் மனு

9.3.15

எம்மையும் இந்த நாட்டு பிரஜைகளாக கருதி விடுதலை செய்ய அமைதியும் சாந்தமும் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் இன்று ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுவொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

நீண்ட காலங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாங்கள் பட்டறிவுகளை பாடமாக கொண்டு இனிவரும் நாட்களை இனிய நாட்களாக எதிர்கொள்ள வேண்டும் என எண்ணியுள்ளோம்.

30 வருடங்களாக உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது அவசரகால, மற்றும் பயங்கரவாத தடை சட்டங்களின் கீழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

சூழ்நிலை கைதிகளான எங்களில் இளைஞர், யுவதிகள், வயோதிபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 320 பேர் இலங்கையிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனை காலத்திலும் அதிகமாக நாம் தண்டனை அனுபவித்து வருகின்றோம்.

எமது வாழ்நாளின் அரை பங்கை சிறைச்சாலைகளுக்குள் கழித்துள்ள எங்களின் குடும்பங்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எங்களின் விடுதலைக்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது நாட்டின் தலைவராகிய தங்களுக்கு இருக்க கூடிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி எங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவியுங்கள்.

சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு தொகுதி மக்கள் சமூகத்தை தலை தூக்கி நிறுத்துவதற்கு நாம் கருணை கரம் நீட்டுகிறோம் என தமிழ் அரசியல் கைதிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை போல் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு எங்களுக்கும் சந்தர்ப்பம் அளியுங்கள் எனவும்,

நாடு தற்போது அபிவிருத்தியையும், சமாதானத்தையும், சுகவாழ்வையும் அனுபவித்து வருவது போல் நாமும் வாழ்வதற்கான வழிவகைகளை செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பெரும்பான்மையின மக்களும் கூட இவர்களின் விடுதலையை ஏற்று கொண்டுள்ள  நிலையில் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நல்லதொரு முடிவு எடுப்பார் என அவர்கள் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த மனுவின் பிரதிகள் பிரதமர், பிரதம நீதியரசர், தேசிய நிறைவேற்று சபை, சட்டமா அதிபர், நீதியமைச்சர், சட்ட ஒழுங்குகள் அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பன்னிருவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :