தலிபான் தலைவன் முல்லா பசுல்லா பலி?

23.3.15

பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் தலிபான் தலைவன் முல்லா பசுல்லா பலியானதாக செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்-இ-தலிபான் (பாகிஸ்தான் தலிபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வசிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் தலைவனாக இருந்த ஹக்கிமுல்லா மெஹ்சூத் என்பவன் கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு புதிய தலைவனாக முல்லா பசுல்லா என்பவன் பொறுப்பேற்று கொண்டான். ’ரேடியோ முல்லா’ என்றழைக்கப்படும் இவன் பெயரை கேட்டால் அழுத குழந்தை கூட அமைதியாகி விடுவதாக உள்ளூர் மக்கள் வேடிக்கையாக கூறுவதுண்டு.
பெண் கல்வி போராளியாக தற்போது மாறியுள்ள சிறுமி மலாலா மீது கொடூரமான தாக்குதல் நடத்தி, அவரை மரணத்தின் வாசல் வரை வழியனுப்பி வைத்த இந்த கொடூரனின் இருப்பிடம் பற்றிய ரகசியத்தை தலிபான்கள் பாதுகாத்து வருகின்றனர்.

நவாஸ் ஷெரிப்பின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தலிபான் தீவிரவாதிகளின் மீது அதிரடியாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. சமீபத்தில் பெஷாவர் பள்ளி மீது தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமான உயிர்களை பறித்த பின்னர் இந்த தாக்குதல் இருமடங்காகி விட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு மேற்கே கைபர் மண்டலத்துக்கு உட்பட்ட திரா பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் ஏராளமான தீவிரவாத முகாம்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்கு தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருவதால், அப்பகுதியில் கடந்த 5 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், சுமார் 100 பேர் காயமடைந்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. பாகிஸ்தான் ராணுவ தரப்பில் 7 வீரர்களும் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, இந்த தாக்குதலில் முல்லா பசுல்லாவும் கொல்லப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த கைபர்-பக்துங்வா மாகாண கவர்னர் மெஹ்தாப் கான் அப்பாஸி, இந்த தாக்குதலில் அவன் கொல்லப்பட்டானா? இல்லையா? என்பது சில நாட்களில் உறுதியாகி விடும் என்று கூறியுள்ளார்.

அதேவேளையில், முல்லா பசுல்லா கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்தியை தலிபான் செய்தி தொடர்பாளரான முஹம்மது கோர்சானி மறுத்துள்ளார். எங்கள் தலைவரின் மரணம் தொடர்பாக வரும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :