என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக் கொள்ளம்மா: முன்னாள் போராளியின் கடைசி வார்த்தை

9.3.15

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

 இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச் சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால், இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார்.

முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார். தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.

முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, “அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா” என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார். நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.

முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ நல்லுள்ளம் கொண்டோர் முன்வர வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும், தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்துள்ளார்.

தொடர்புகளுக்கு: 0094 7744 925550094 7744 92555,

 0094 7765 227350094 7765 22735

0 கருத்துக்கள் :