கடைக்குள் தூங்கிய திருடன் சிக்கினான்

4.3.15

கடைக்குள் புகுந்த திருடன், திருடிய பொருட்களையெல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு விடிய விடிய கண்ணயர்ந்து விடிந்தும் விழி அயர்ந்த   சம்பவமொன்று மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் வந்து திருடனை தூக்கிச்செல்லும்  வரையிலும் அவன் அக்கடைக்குள்ளேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளான். குறித்த திருடன் இவ்வாறான திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டு நான்கு முறைகள் சிறைச்சாலைக்கு சென்றுவந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மஹியங்கனை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் திருடுவதுக்காக திருடன் ஒருவன் நேற்று அதிகாலை நுழைந்துள்ளான்.

அந்த வர்த்தக நிலையத்தில் தனக்கு தேவையான மற்றும் பெறுமதியான பொருட்களை மூட்டையில்  கட்டி மேசை மேல் வைத்துள்ளான். பக்குவமாக திருடிய பொருட்களை மூடையாக கட்டுவதற்குள் கண்களும்  கட்டிவிட்டன.
விடிய விடிய விழித்திருந்த களைப்பில் அங்கிருந்த மேசையிலேயே சௌக்கியமாக சாய்ந்து காலையும் குளிர்சாதன பெட்டியின் மேல் நீட்டி கண்ணயர்ந்துவிட்டான்.

போதையும் சுகமாக நித்திரைக்கு இடையூறு விளைவிக்காமையால் விடிந்ததையும் தான் வந்த வேளையும் தெரியாமல்  போனமையால் விடிவிடிய கண்விழிக்கவும் இல்லை.
இந்நிலையில் குறித்த  வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான பெண் நேற்று காலை வந்து வர்த்தக நிலையத்தை திறந்த போது திருடன் நித்திரை கொள்வதையும் பொருட்கள் மூட்டை கட்டப்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளார்.
 
அரவம் கேட்காது பொலிஸாருக்கு அப்பெண் அறிவிக்கவே ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு,திருடனின் தூக்கத்தை களைத்துவிட்டாமல் அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றிகொண்டு பொலிஸூக்கு சென்றுவிட்டனர்.

சந்தேக நபர் பல முறை சிறை சென்றவர் என தெரிவித்த மஹியங்கனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :