நாட்டுக்காக உழைத்த எமக்கு தண்டனை வழங்குவது அநீதி; கோதாபய தெரிவிப்பு

10.3.15

நான் சட்ட விரோதமாக எதனையும் செய்யவில்லை. சட்டத்துக்கமையவே செயற்பட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ; இந்த விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் நான் ஏற்கனவே சகல விபரங்களையும் கொடுத்துவிட்டேன். இதுபற்றிய விசாரணை முடியாத நிலையில் என்னுடைய கடவுச்சீட்டு பறிக்கப்பட்டமை தவறு. எத்தனையோ கஷ்டங்களுக்கு முகம் கொடுத்த போதிலும் நாம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. சிலர் எம்மை கொலைகாரர்களாகவும் கள்வர்களாகவும் உலகுக்குக் காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் என்ன செய்தோம். நாம் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவர். நாம் பொதுச் சொத்துகளை சூறையாடவில்லை. நாட்டுக்காக உழைத்த எமக்கு இவ்வாறு தண்டனை வழங்குவது அநீதியானது. சிலர் சுயநல அரசியல் இலாபத்துக்காக எமக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இந்த சூழ்ச்சிகளின் பின்னால் உள்ளவர்களின் பெயர்களே இதனால் கெட்டுப்போகும். இதில் சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதை நான் அறிவேன் என்றார்.

0 கருத்துக்கள் :