தாய், இரு குழந்தைகளை கொன்றவருக்கு இரட்டை தூக்கு

18.3.15

கோவையில் தாய், இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை, கணபதி அருகே ராமகிருஷ்ணா நகர், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் மருத மாணிக்கம். இவரது மனைவி வத்சலாதேவி (28). இவர்களுக்கு மகிலன் (7) மற்றும் 11 மாதக் குழந்தை பிரனீத் ஆகியோர் இருந்தனர். கடந்தாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி மருத மாணிக்கம் வெளியூர் சென்றிருந்தார். அவரது தாயார் கோவிந்தம்மாளும் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். வத்சலாதேவியும், 2 குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.

அன்று இரவு கோவிந்தம்மாள் வீடு திரும்பிய போது, வீட்டின் குளியலறையில் வத்சலாதேவி கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், குழந்தை மகிலன் கட்டிலில் கத்தியால் வயிறு கிழிக்கப்பட்ட நிலையிலும், குழந்தை பிரனீத் தொட்டிலில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள், தனது மகன் மருத மாணிக்கத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய கோவை, சரவணம்பட்டி காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவர்களது வீட்டில் குடியிருந்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் கொலை செய்ததை செந்தில்குமார் ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், "எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கருங்கபாளையம். நான் எனது பெற்றோருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கோவை வந்துவிட்டேன். இங்கேயே 10ஆம் வகுப்பு வரை படித்த நான் டிரைவர் தொழில் செய்து வந்தேன்.

எனது நண்பர்கள் கணபதி ரங்கநாதர் தெருவில் உள்ள வத்சலா தேவியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் வீட்டுக்கு சென்றபோது முதல் முறையாக வத்சலா தேவியை பார்த்தேன். அவர் மீது ஆசை ஏற்பட்டது. இதற்கிடையில் எனக்கும் லீலாவதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தேன்.

இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மருதமாணிக்கத்துக்கு சொந்தமான குடியிருப்பில் ஒரு வீடு காலியாக இருப்பதை அறிந்து, அங்கு குடியேறினேன். எனது மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். எனக்கும், என் மனைவி லீலாவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அப்போதெல்லாம் வத்சலா தேவியின் கணவர் மருதமாணிக்கம் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பார். என்னை கண்டிக்கவும் செய்வார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எனது மனைவி என்னுடன் கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். என் நடத்தை சரியில்லாத காரணத்தால் மருதமாணிக்கம் என்னை வீட்டை காலி செய்யும்படி கூறினார். நான் வீட்டை காலி செய்தேன். இதனால் அவர்கள் மீது எனக்கு மிகுந்த ஆத்திரம் இருந்தது.

வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்த தொகையில் ரூ.2,500 எனக்கு கொடுக்க வேண்டி இருந்தது. அதை கேட்க சென்ற போது வீட்டுக்கு யாராவது குடிவந்தால் அட்வான்ஸ் தொகையை கொடுப்பதாக சொன்னார்.  அதன்படி தனக்கு தெரிந்தவருக்கு வீடு தேவை. அவர்களை அழைத்து வரட்டுமா?' என கேட்டேன். அவர்களும் அழைத்து வரச்சொன்னார்கள்.

அதன்படி ஜூன் 1ஆம் தேதி மாலை வத்சலா வீட்டுக்கு சென்று அழைத்த போது 'இன்று வேண்டாம். கணவரும், மாமியாரும் வீட்டில் இல்லை. நான் மட்டும் தான் இருக்கிறேன்' என்றார். என் குடும்ப பிரச்னையில் ஈடுபட்ட மருதமாணிக்கத்தை பழி வாங்கவும், வத்சலாவை அடையவும் இதுதான் சரியான தருணம் என எண்ணி, மது அருந்தி விட்டு வத்சலா வீட்டுக்கு சென்று, அவரை ஆசைக்கு இணங்கும்படி கேட்டேன். அவர் மறுத்து, என்னை கடுமையாக திட்டினார். அவரை வன்புணர்வு செய்ய முயன்றேன்.

என்னை தள்ளி விட்டு பாத்ரூமுக்குள் ஓடினார். உடனே நான் கொண்டு சென்ற கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து வத்சலாவை கொன்றேன். அங்கிருந்து வெளியேறும்போது வத்சலாவின் மூத்த மகன் இதை பார்த்துக்கொண்டு இருந்தான். அவனையும் படுக்கையில் வைத்து கத்தியால் குத்தி கொன்றேன். தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அழுததால், குழந்தையை தொட்டிலில் வைத்து கத்தியால் குத்தி கொன்றேன்," என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, இவ்வழக்கில் இன்று (17ஆம் தேதி) தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, வீட்டில் அத்துமீறி நுழைந்து, தாய், இரு குழந்தைகளை கொன்ற வழக்கில், இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தாய், இரு குழந்தைகளை கொன்ற வழக்கில், சம்பவம் நடந்த 10 மாதங்களுக்குள் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துக்கள் :