மோடியின் விஜயம்; தமிழர்களுக்கு கிடைத்த இறுதிச் சந்தர்ப்பம்: சங்கரி

12.3.15

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம், தமிழர்களுக்கு கிடைத்த அருமையான இறுதிச் சந்தர்ப்பம் ஆகும். மோடியின் வருகையின் போது, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஆனந்த சங்கரியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியப் பிரதமர் மோடியின் வருகை உற்சாகமூட்டும் புதிய திருப்புமுனையாக அமைகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பல தடைகளும் சந்தர்ப்பங்களும் வந்து போனதை நாம் அறிவோம். அவற்றில் நாம், சில காரணங்களினால் நழுவவிட்ட சந்தரப்பங்களும் உண்டு. இன்று தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மாற்றமும் இலங்கை மக்கள் ஒருமனதுடன் கோபதாபங்களை மறந்து செயற்பட்ட ஆட்சி மாற்றமும் மேலும் வலுச் சேர்க்கிறது. 

மோடியின் விஜயத்தை சாதகமாக பயன்படுத்த வேண்டிய நேரமும் தேவையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உண்டு. இந்த அரிய சந்தர்ப்பம், தமிழ்க் கட்சிகள் ஒரே குரலில் பேசி ஒரு நிலையான தீர்வை எட்டுவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும். இதை சரியாக பயன்படுத்த வேண்டியது தமிழ்த் தரப்பினராகிய எமது கடமை ஆகும். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருமதி சுஷ்மா ஸ்வராஜின் வேண்டுகோளை தார்மீக கடமை உணர்வுடன் ஏற்று, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நான் வலியுறுத்துகிறேன்.

அவருடன் சேர்ந்து ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் மலையக தமிழர்களின் தலைமைகளையும் ஒன்று சேர்த்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள, இணைந்து செயற்பட அழைப்பை விடுப்பதுடன் இணைந்து கூட்டாக செயற்பட்டு தீர்வைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்கவும் தயாராகவுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் இந்திய அரசின் ஆர்வத்தையும் சாதகமாக்கி, எமது ஒற்றுமையை வழங்கி நிரந்தர தீர்வை காண அனைவரும் முன்வருவோம். இந்த இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடின் வரலாறு எம்மை மன்னிக்காது. சமய சந்தர்ப்பங்கள் தெரியாமல் ஒருசிலரால் வெளியிடப்படும் அறிக்கைகள், தீர்வுக்கு எந்தவகையிலும் உதவாது என்பதையும் அவை தீர்வுக்கு மாறான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் வருத்தத்துடன் அறியத் தருகின்றேன்' என அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :