எப்படிச் சமாளிக்கப் போகிறது கூட்டமைப்பு?

1.3.15

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள ஒரு அமைதி நிலை தமிழர்களின் அரசியலில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

இதே பத்தியில் இதுபற்றி முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம். எதிர்ப்பு அரசியலும் செய்ய முடியாத – இணக்க அரசியலும் செய்ய முடியாத ஒரு இடைப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முரண்பாடுகளும், கருத்து மோதல்களும் வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை நிரூபிக்கும் வகையில், பல சம்பவங்கள், தமிழர் அரசியலில் அரங்கேறி வருவது ஆபத்தின் அறிகுறிகளை உணர்த்தி நிற்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சிகள் முனைப்படைந்துள்ளமை அதில் ஒன்று. அத்தகைய மாற்று அணியை உருவாக்குவதற்கான முகிழ்நிலையைத் தோற்றுவிப்பதற்குத் திட்டமிட்டே சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுவது இன்னொன்று.
இப்படியான நிகழ்வுகள் தமிழ் மக்கள் மத்தியில், ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த அரசியல் சூழல் சவாலானது,

எதிர்நீச்சல் போட வேண்டியது என்பதை, விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த கதியுடன் ஒப்பிட்டு, முன்னைய பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டது நினைவிருக்கலாம்.
இன்றைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில், மாற்று அணிகள் என்பது தேவையா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

இதுவரையில் தமிழர்கள் சிதறிப் போயிருந்ததால், பிளவு பட்டு நின்றதால், பாதிப்புக்களையே அதிகம் சந்தித்துள்ளனர். இதுதான் தமிழர்தரப்புக்கு கடந்த காலங்களில் கிடைத்த ஆதாயம்.
தமிழர் தரப்புக்கள், முட்டி மோதிக் கொண்டதும், முரண்பட்டுக் கொண்டதும், ஒருவரை மற்றவர் இழுத்து வீழ்த்தியதும், காலை வாரிவிட்டதும், தமிழர்தரப்பை நசுக்க நினைத்தவர்களுக்கே சாதகமாக அமைந்தது.

இந்தச் சூழலில் தான், தமிழர் தரப்பு ஒன்றுபட்டு நின்றாலே பலத்தை நிரூபிக்க முடியும், சாதிக்க முடியும் என்பது உணரப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு அந்தச் சிந்தனை முழுமுதற் காரணம் என்பதில் சந்தேகமில்லை.
அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்குப் பின்னர், தமிழர் தரப்பு முற்றிலும் ஒற்றுமையாக - ஒன்றுபட்டுச் செயற்பட்டது என்று கூற முடியாது.

ஆனாலும், பிரிந்து நின்று மோதி, தமிழர் அரசியல் சக்தியைப் பலவீனப்படுத்திக் கொள்வது கொஞ்சம் குறைந்து போனது என்பதை ஏற்றேயாக வேண்டும்.
இது, தமிழர் தரப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டிய- ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலம்.

கடந்த ஜனவரி 8ஆம் திகதி வரை, தமிழர் தரப்பின் குரலை உன்னிப்பாக கேட்ட சர்வதேசம், இப்போது அதனை அலட்சியத்துடன் பார்க்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதாவது தமக்கு வசதியான நிலை ஒன்று கொழும்பில் உருவாகியதும், தமிழர்களைக் கைவிடுகின்ற நிலைக்கு சர்வதேச சமூகம் சென்றிருக்கிறது.

இத்தகைய பின்புலச் சூழலில், தமிழர் அரசியல் என்பது, வலிமையிழப்பது, இப்போது தோன்றியுள்ள ஆபத்தான நிலையை மேலும் மோசமானதாக்கும்.
புதிய அரசியல் அமைப்புக்களின் ஊடாக, தமிழர் நலன்களை வென்றெடுக்கலாம் என்ற சிந்தனை நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

இப்போது தமிழர்களுக்கு தேவையானது ஒன்றுபட்ட பலமே தவிர, சிதறிக் கிடக்கும் புதிய, புதிய அரசியல் அமைப்புக்கள் அல்ல. அத்தகைய புதிய அரசியல் சக்திகளின் பிறப்பு, தமிழர்களின் குரலைப் பலவீனப்படுத்தவும், அரசியல் அபிலாஷைகளை நசுக்கவுமே பயன்படுத்தப்படும். இந்த யதார்த்தத்தை பலரும் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், பல குழப்பங்கள் இருப்பது உண்மை. பலருக்கு அநீதிகள் இழைக்கப்படுவதும் உண்மை.
அவை அனைத்தும், ஒரு ஜனநாயக கட்டமைப்புக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து, உறுப்பினர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகள் தொடர்பாக, கருத்துக் கேட்கும் போதெல்லாம், அதன் தலைவர் இரா.சம்பந்தனால் கூறப்படுகின்ற பதில், “எமது அமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு. அதனால் மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.” என்பதேயாகும்.

ஒரு வகையில் அது சரியான பதிலாகவே இருந்தாலும், அத்தகைய மாற்றுக் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும், கூட்டமைப்புத் தலைமை மறந்து விடலாகாது.
மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பு இல்லாமல் போகும் போது தான், பிளவுகள், விரிசல்கள் தீவிரமாகும்.
அண்மைக்காலமாக, குறிப்பாக, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்களின் மாற்றுக் கருத்துகள் தீவிரமடைந்துள்ளன.

மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததில் இருந்து, சுதந்திர தின நிகழ்வில் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது, ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டது பற்றிய கருத்துகள் வரையில், கூட்டமைப்புக்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
இவையெல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதாகவே கருதினாலும், அது அதற்கும் அப்பாற்பட்ட வன்மம் மிக்கதாக மாறிவருவதையும் அவதானிக்க முடிகிறது.

அதற்கு உதாரணமாக, கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்களின் அமைப்பு ஒன்றினால், நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணியின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
இந்தச் சம்பவம், தமிழர் அரசியல் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழர் மனதிலும் எழுப்பியிருக்கிறது.

அந்தப் பேரணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.
ஒரு கட்டத்தில், திடீரென பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவபொம்மை கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டது.

பேரணியில் பங்கேற்றவர்களோ அதை யார் செய்தார்கள் என்று தமக்குத் தெரியாது என்கின்றனர்.
ஆனால், அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும், மக்களின் கோப உணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் அவர்கள் அதை நியாயப்படுத்துகின்றனர்.
அந்தச் செயலை நியாயப்படுத்துவதில் துணிச்சல் கொண்டவர்களுக்கு, அதை தாமே எரித்தோம் என்று கூறும் துணிச்சல் வராமல் போனது ஆச்சரியம்.

எவ்வாறாயினும், அந்தப் பேரணியில் உருவபொம்மையை எரித்தவர்களும் கூட்டமைப்பினர் தான், எரிக்கப்பட்ட உருவபொம்மையும் கூட்டமைப்பைச் சேர்ந்தவரது தான் என்பதே உண்மை.
இந்த உருவபொம்மை எரிப்பின் ஊடாக, காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டம், கொச்சைப்படுத்தப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.

இந்த உருவபொம்மை எரிப்பின் மூலம், காணாமற்போனோரின் உறவினர்களின் எதிர்பார்ப்புகள், கேள்விக்குறியாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
காணாமற்போனோரின் உறவினர்கள் படும் வேதனை உண்மையானது. கொடுமையானது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.

அவர்களின் துன்பத்தை எவரும் அரசியல் நலனுக்காக பயன்படுத்த முனையக் கூடாது.
ஆனால், வெட்கக்கேடான வகையில், தமிழர் தரப்பில் இப்போது, கொல்லப்பட்டவர்களும், காணாமற்போனவர்களும், சிறையில் உள்ளவர்களும், அரசியல் பகடையாக்கப்பட்டு வருகின்றனர்.
காணாமற்போனோரின் உறவினர்களின் போராட்டம், அரசியல் மயப்படுத்தப்படாமல் இருக்கும் வரையில் தான், அது பெறுமதிமிக்கதாக, மற்றவர்களால் மதிக்கப்படும் ஒன்றாக இருக்கும்.
எப்போது அதற்குள் அரசியல் நுழைகிறதோ, நுழைக்கப்படுகிறதோ, அப்போதே அந்தப் போராட்டம் வீரியமிழக்கத் தொடங்கி விடும்.

அந்தப் பேரணியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தனக்கும் உருவபொம்மை எரிப்புக்கும் தொடர்பில்லை என்றும், சுமந்திரனுடன் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இந்தளவுக்கு தாம் செல்லமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், காணாமற்போனோரின் உறவுகள் எதிர்காலத்தில் நடத்தப்போகும் போராட்டங்களில், கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கத் தயங்குவார்கள்.

ஏனென்றால், அங்கும் உருவபொம்மைகள் எரிக்கப்படலாம் என்று அவர்கள் அஞ்சக்கூடும்.
அதன் காரணமாக, தலைமைக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை வரும் என்று அவர்கள் கலங்கலாம்.
இது, பலவீனப்படுத்தப் போவது, காணாமற்போனோரின் உறவுகளின் குரலைத் தான்.
காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டங்களில், தற்போது கலந்து கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவது துரதிர்ஷ்டமானது.

நாள் செல்ல செல்ல, காணாமற்போன தமது உறவுகள் இனியும் தப்பியிருப்பார்களா என்ற சந்தேகம் வலுப்பதும், அதனால் ஏற்படும் மனச் சோர்வும், தனது உறவுகளே போய் விட்ட பின்னர், இனியென்ன தமக்கு என்ற கவலையும், நீதி முறைமையின் மீதுள்ள அவநம்பிக்கையும், இத்தகைய போராட்டங்களில் இருந்து பலரையும், ஒதுங்கி நிற்க வைக்கிறது.

இவ்வாறு, காணாமற்போனவர்களின் உறவுகளே ஒதுங்கத் தொடங்கி விட்டதால், இவர்களின் போராட்டங்களின் வீரியம் குறைந்து வருவது கண்கூடு.
இத்தகைய நிலையில், இருக்கின்ற ஆதரவையும் இல்லாமல் செய்வதென்பது, காணாமற்போனவர்களைத் தேடிப்பிடிக்கும் முயற்சிக்கு ஒருபோதும் துணையாகமாட்டாது.
உதாரணத்துக்கு, கடந்த 21ஆம் திகதி, சுமந்திரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கே பெரும்பாலான ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர, அந்தப் பேரணிக்கு அல்ல என்பதை குறிப்பிட வேண்டும்.

காணாமற்போனோரின் உறவினர்கள் சுமந்திரனின் உருவபொம்மையை எரிக்கின்ற அளவுக்கு ஆத்திரம்மிக்கவர்களாக இருந்தனர்.
ஆனால், தமது உறவுகள் காணாமற்போக காரணமானவர்களின் உருவபொம்மைகளை இவர்கள் ஏன் எரிக்க முனையவில்லை?
காணாமற்போனோரின் உறவினர்களின் போராட்டம், எந்த திசையில் செல்கிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

சுமந்திரனின் உருவபொம்மை எரிக்கப்பட்ட விவகாரத்தில், யாருமே அதற்கு உரிமை கோரவில்லை.
அவ்வாறு உரிமை கோரத் தயாராக இல்லாத நிலையில், கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளையும், விரோதங்களையும் வளர்க்கும் நோக்குடனும் கூட, தீயசக்திகளால் அத்தகைய சதித்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.

அந்த சதித் திட்டம் உண்மையாக இருந்தால், அது கூட்டமைப்பை பிளவுபடுத்தும் பெரும் திட்டம் ஒன்றின் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.
அதன் ஆபத்தை, கூட்டமைப்பின் தலைமை மட்டுமன்றி, பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளைத் தான் இத்தகைய பிளவுகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்தப் பொறியை கூட்டமைப்பு எவ்வாறு சமாளித்து முன்னேறப் போகிறது என்பது சவாலான விடயம் தான்.
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சவாலை சரியாக சமாளித்தால் தான், தனது பலத்தை குலையாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
கபில்

0 கருத்துக்கள் :