யாழ். ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவு படிப்படியாக செயலிழக்கும் நிலையில்

8.2.15

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறையினால் தினசரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து வருகைதரும் தாங்கள் முழுமையான சிகிச்சை பெறமுடியாத நிலையில் வீண் அலைச்சலுக்குள்ளாவதாக மக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு யாழ்ப்பாணம் மட்டுமல்லாது வடக்கின் பல பகுதிகளிலிருந்தும் தினமும் பல நூற்றுக்கணக்கில்  நோயாளிகள் சிகிச்சைகளுக்காக வருகின்றனர். இந்நிலையில் தினசரி இந்த வெளிநோயாளர் பிரிவில் 600 தொடக்கம் 800 வரையான வெளிநோயாளர்கள் சிகிச்சைகளுக்காக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வெளிநோயாளர் பிரிவில் குறைந்தது 30 வைத்தியர்களாவது கடமையில் இருக்கவேண்டும். எனினும் தற்போது 8 வைத்தியர்களே கடமையில் உள்ள நிலையில், இந்த 8 வைத்தியர்களே ஒரு நாளைக்கு 600 தொடக்கம் 800 வரையான நோயாளர்களையும் பார்வையிடவேண்டிய நிலையுள்ளது.

இந்நிலையில் வெளிநோயாளர் பிரிவிலிருக்கும் வைத்தியர்கள் எண்ணிக் கை குறைவு என்பதனால் சிகிச்சைகளுக்காக வருகைதரும் அனைத்து நோயாளர்களையும் பார்வையிடவேண்டும் என்ற நோக்கில் கடமையிலிருக்கும் வைத்தியர்கள் நோயாளர்களின் பிரச்சினைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாமல், திணறிக்கொண்டிருப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை வட்டாரங்களை வினவியபோது, 30 வைத்தியர்கள் சேவையில் இருக்கவேண்டும் என்பதனை ஒத்துக்கொள்ளும் அவர்கள், பல வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையாலும் பெண் வைத்தியர்கள் பலர் விடுமுறையில் சென்றிருக்கின்றமையினாலும் தற்போது 8 வைத்தியர்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளதுடன், இடமாற்றம் வழங்கப்பட்ட வைத்தியர்களுக்குப் பதிலாக வேறு வைத்தியர்கள் எவரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த வைத்தியர்கள் பற்றாக்குறையினால் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர்கள் ஒத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்ட வைத்தியர்களுக்கு மாற்றீடான வைத்தியர்கள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்பதுடன் எஞ்சியவர்களை இடமாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்திய அதிகாரிகள் கூடியளவு கவனம் எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வெளிமாவட்ட போதனா வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் 30 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இருப்பதால் அங்கு மாலைநேர (மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை) வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் இயங்குவதாõகவும் ஆனால் யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் பத்துக்கும் குறைவான டாக்டர்களே கடமையில் இருப்பதால் இங்கு மாலைநேர வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் இயங்குவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

0 கருத்துக்கள் :