கோத்தபாய கையகப்படுத்திய காணிகளை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குவோம்

2.2.15

கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஷ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறி வடமாகாண தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய காணிகள் மீண்டும் அம் மக்களுக்கு கையளிக்கப்படுமென ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ராஜபக்ஷ என்ற  புற்று நோயை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவை தொடர்ந்தும் அவ்வாறே கணிக்கப்படும்.

ஆனால் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளாக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஷ தன்னிச்சையாக தனது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ளார்.
அவ்வாறு கையகப்பபடுத்தப்பட்ட காணிகளை மீண்டும் தமிழ் மக்களுக்கே வழங்குவோம். தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இப் பிரச்சினை சிங்கள மக்களுக்கும் உள்ளது.

பானமவில் அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த 4000 க்கு மேற்பட்ட சிங்கள விவசாயிகள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவ்வாறு கையடக்கப்பட்ட காணிகளுக்கு என்ன நடந்தது?
உல்லாசப் பிரயாணிகளுக்கான ஹோட்டல் நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்து.

வட மாகாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் படையினர் கல்ப் விளையாட்டுத் திடல் அமைப்பதன்றால் அது பிழையான விடயமாகும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி மக்களின் காணிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்காக கையகப்படுத்துவது வேறு விடயம்.

ஆனால் தனிப்பட்டவர்களின் வர்த்தகத்திற்காக அதியுயர் பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு காணிகளை கையகப்படுத்துவது  பிழையான செயலாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ராஜபக்ஷ என்ற புற்று நோயை ஒழித்துக் கட்டி அதனை தூய்மைப்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த போதும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் என நான் நம்புகிறேன்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த ஐ.தே.கட்சி மாபெரும் அர்ப்பணிப்பை செய்ததை  மறந்து விடக் கூடாது.

அதேவேளை நூறு நாள் வேலைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு  பலம் தேவை. அத்தோடு பண்டாரநாயக்க சிந்தனையை சுதந்திரக்கட்சிக்குள் முன்னெடுத்து ராஜபக்ஷவை ஒழித்துக்கட்ட வேண்டும்.

இவ்வாறு பாரிய கடப்பாடுகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவர் கிராமத்தில் பிறந்தவர். எனவே பிரச்சினைகளை திறமையாக தீர்த்து வைப்பார் என்பது நிச்சயமாகும்.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரச்சினைகள் தலைதூக்காது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :