அரசியல் தீர்வே தேவை: அர்த்தமற்ற தீர்வை ஏற்கோம்

15.2.15

பிரயோசனமற்ற அரசியல் தீர்வு எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதியுமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதும் பாதுகாப்பு, காணி, கல்வி, விவசாயம், பொருளாதாரம் ஆகிய  அதிகாரங்களை உள்ளடக்கியதும் பிராந்திய ரீதியில் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுமாக அரசியல் தீர்வு  அமைய வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கும் என்றும் சம்பந்தன் கூறினார்.

திருகோணமலையில் நியூசில்வர் ஸ்டார் விடுதியில் நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இக் கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தண்டாயுதபாணி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
இங்கு சம்பந்தன் மேலும்  பேசுகையில் ; 
ஜனவரி 8 க்குப் பின்னர் பதவிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் போர்க் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச பங்களிப்புடனான உள்ளக நம்பிக்கையான விசாரணை ஒன்றை நடத்துவதற்குத் தயார் என்று கூறியுள்ளது.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா, பிரித்தானியா , இந்தியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசிவருகின்றார். கூட்டமைப்பும் சர்வதேச  பிரதிநிதிகளையும் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

இனப் பிரச்சினைக்கு  நிரந்தரத் தீர்வு முழுமையாகக் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மதிப்பு வைத்து இருக்கிறது. இலங்கை தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது. பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் நிலைத்து நிற்கக் கூடிய நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் பூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இலங்கையின் போர் நிறுத்த மீறல்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணையின் இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும்  மார்ச் மாதம் நடைபெறவிருக்கும்  ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :