ஜனாதிபதி தேர்தல் பரப்புரை இன்று இரவுடன் நிசப்தம்

5.1.15

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று 5 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கு பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பமானால் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 29 நாட்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பிரசார கூட்டங்கள் யாவும் இன்று திங்கட்கிழமை  நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் அடங்களாக 19 பேர் போட்டியிட்டாலும் ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்கு ஆதரவான பிரசார நடவடிக்கைகளே சூடுபிடித்திருந்தன.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாக்களிப்பு தினம் வரை மௌனக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்களம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்கள் தொடர்பாகவும் நன்கு சிந்தித்துப்பார்த்து பொருத்தமான தீர்மானமொன்றுக்கு வருவதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காகவே இந்த மௌனக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது  என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் இறுதி பிரசாரக்கூட்டம், கெஸ்பேவ பிரதேசத்த்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் இறுதிப்பிரசாரக் கூட்டம் மருதானையிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :