பிரான்ஸ் சம்பவத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது

10.1.15

பிரான்சின் பிரசித்தி பெற்ற நையாண்டி வார இதழான சார்லி எப்டோ மற்றும் பிரென்சு காவல்துறை அதிகாரிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம,; உயிரிழந்தவர்களுக்கு தனது மரியாதையினையும் தெரிவித்துள்ளது.


பிரென்சு தேசத்தினை பெரும் துயரில் உறையவைத்துள்ள பயங்கராவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இக்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :


சனநாயகத்தின் தூண்களாகவுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரத்தினை  'சார்லி எப்டோ' அச்சமில்லாது கைக்கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சு புரட்சியின் வழியே முகிழ்ந்து இன்று வரை தொடரும் 'சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியவனற்றின் மதிப்புக்களாக இவ்விழுமியங்கள் அமைந்திருந்தன.


பலரும் சுட்டிக்காட்டியது போல் கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள், எல்லோரையுமே பாராபட்மின்றி சமமானதாகவே கையாண்டு வந்த இச்சஞ்சிகை, மதம் சார்ந்தவர்களுக்கு அப்பாலும் சென்று புத்திஜீவிகள், கலைத்துறை சார்ந்தவர்கள் எல்லோரையுமே நையாண்டி செய்துவந்துள்ளது.


'முழங்கால் இட்டல்ல, நின்று கொண்டே இறக்க விரும்புகின்றேன்' என சார்லி எப்டோ சஞ்சிகையின் ஆசிரியர் ஸ்ரெவன் சார்பொனியே அவர்கள் கூறிய வார்த்தைகள் எழுச்சியூட்டுவதாகும், பத்திரிகை சுதந்திரத்தின் மரபுகளை பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தன.


அச்சமற்ற தைரியமான ஸ்ரெவன் சார்பொனியே அவர்களது செயற்பாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலைவணங்குகின்றது.


பயங்கரவாதிகளின் உத்திகள் சுய தணிக்கையை விளைவிக்காது என்ற ஒர் தெளிவான செய்தியினையும் வெளிக்காட்டியுள்ளது.


நையாண்டியானது  நகைச்சுவையினையையும், புதிய சிந்தனையையும், நுண்ணறிவுத் தேடலையும் ஏற்படுத்த வல்லது. அரசியல் பிரசாரத்தின், விமர்சனத்தின் ஓர் மதிப்புமிக்க அறிவார்ந்த வடிவமாகவும் உள்ளது. பிரென்சு அரசியல் வெளியில் நையாண்டிக்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது


பயங்கரவாதிகளது இக்காட்டுமிராண்டித்தனமான செயல், ஐரோப்பாவில் இஸ்லாமியர் மீதும், குடியேற்றவாசிகள் மீதும் எதிர்ப்புணர்வினை வளர்ந்துவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.


'சனநாயகம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்;துக்கு எதிரான  காட்டுமிராண்டித்தனமான செயல்' என பிரான்சின் இஸ்லாமிய கவுன்சில் விடுத்திருந்த கண்டனமானது முஸ்லிம் மக்களது பெரும்பான்மை உணர்வை பிரதிபலிக்கிறது.


2012ல் நோர்வேயில் 77பேர் கொலைக்குள்ளான நிகழ்வு, தீவிர இஸ்லாமியர்களின் வெளிப்பாடல்ல. அது தீவிர வலதுசாரிகளினால் நடந்தேறியது என்பதனையும் இங்கு  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


கருத்துச் சுதந்திரத்தி வெளிப்படுத்தியதன் காரணமாக, இலங்கைத்தீவில்  நீதிக்குப் புறம்பான கொலை மற்றும் சித்திரவதை உள்ளாகிய அனுபவம் தமிழ் மக்களாகிய எங்களுக்கு உண்டு. சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சிறிலங்கா அரசானது, அமைதி முறையில் மக்கள் தங்களது அரசியல் கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை வெளிப்படுத்துவதனை ஓர் குற்றச்செயலாக கருதுகின்றது. கருத்துச் சுதந்திரத்தை அடக்கும் வகையில் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 19 பத்திரிகையாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


'சுதந்திரம் எப்போதும் காட்டுமிராண்டித்தனத்தினை விட வலிமையானது' என பிரஞ்சு அரசுத் தலைவர் பிரான்சுவா ஹாலண்ட் அவர்கள் கூறியிருந்தார். பெருந்துயரில் உறைந்திருக்கும் பிரென்சு தேசத்தோடும் நாமும் இதயபூர்வமாக கரங்கோர்த்து நிற்கின்றோம்.


"நாங்கள் அனைவருமே சார்லி"  “We are all Charlie – Je suis Charlie”


இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துக்கள் :