அதிகளவு சுயாட்சி வழங்க அரசாங்கம் தயார்: பிரதமர் ரணில்

18.1.15

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதிகளவிலான சுயாட்சியை வழங்குவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சனல் என்.டி.டிவிக்கு அளித்திருக்கும் விஷேட பேட்டியிலேயே  ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டார்.

ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறுஆய்வு செய்ய உள்ளோம். விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக ஐ.நா.நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும். இதுவரை மகிந்த ராஜபக்ஷ அதற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவந்தார். இனிமேல் அது நடக்காது.

கொள்கைரீதியாக தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது எனவும் ரணில் தெரிவித்தார்.

சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தியை ரணில் மறுத்துள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா விசாரணையை நடத்துவதற்காக நிபுணர் குழு ஒன்று நியமித்து விசாரணை நடாத்தி வருகின்றது.

இந்தக்குழுவுடன் அரசு இணைந்து செயல்படுவதோடு, குற்றத்துக்கான தண்டனையை உள்நாட்டு சட்டதிட்டத்தின்படியே அணுகப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு சீனா மற்றும் ஏனைய வெளிநாடுகளினால் இலங்கையில் அமுலாக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதோடு மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் கூறினார்.

0 கருத்துக்கள் :