மனநிலை பாதிக்கப்பட்டவர் தீயிட்டு எரித்து கொலை: வீடியோ சிக்கியது

15.1.15

வீரக்கெட்டிய, அக்குறுவெல பிரதேசத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட நபரொருவரை, ஒரு குழுவினர் தீயிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

 பொலிஸ் தலைமையகத்தில், புதன்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், வீரக்கெட்டிய, அக்குறுவெல பிரதேசத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட நபரொருவர் உறங்கிக் கொண்டிருந்த டிரக் வண்டியை தீயிட்டு எரித்துள்ளனர்.

 இந்த சம்பவத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அருகிலிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வீரக்கெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

 குறித்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் வண்டியொன்று தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் அதன் உள்ளே நபரொருவரின் சடலம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது, அருகிலிருந்த சீ.சீ.டி.வி கமராவில் குறித்த சம்பவம் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன் இந்த காட்சிகள் பெறப்பட்டு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண மேலும் கூறினார்.

0 கருத்துக்கள் :