தேர்தல் தோல்விக்குப் பின்னர் இராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி; இடமளிக்கப் போவதில்லை என்கிறது ஜே.வி.பி

4.1.15

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்தவர்கள் அவரை கைவிட்டுச் சென்றுள்ள நிலையில் அவரின் தோல்வி உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி, தோல்வியுற்ற பின்னர் எந்த வழியிலாவது  அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பார்களாக இருந்தால் அதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிதாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லாது எதிர்க்கட்சி மீது சேறு பூசுவதை மாத்திரமே தேர்தல் நடவடிக்கையாகக் கொண்டுள்ளார்.ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான ஒப்பந்தம் இருப்பதாக கூறுவதும் அதனாலேயே அந்த ஒப்பந்தம் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
அத்தோடு அரசாங்கத்திலிருந்து வெளியேறியோர் அரசாங்கத்தில் இருந்தபோது தெரிவித்த விடயங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெளியிட்டு பிரசாரம் செய்கின்றனர்.

இதேவேளை ஒருபோதும் இல்லாதவாறு முப்படையினரையும் ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். ராஜபக்ஷக்களுக்கு எவ்வித பண்பும் பொருந்தாது. அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரம் மட்டுமே. நாட்டிலுள்ள சகல சட்டதிட்டங்களையும் இல்லாது செய்துள்ளனர்.
இவர்களுக்கு அதிகாரம் இன்றி இருக்கமுடியாது. இதனால் சகல பண்புகளையும் மதிக்காது அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்ன செய்தாலும் அவரால் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியாது.

2010 இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்த பலர் அவரை கைவிட்டு சென்றுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலர், ஹெல உறுமய, ரிஷாத் பதியுதீனின், கட்சி கலைஞர்கள் பலர் அவரை கைவிட்டுச் சென்றுள்ளனர். அவருக்காக எழுதிய ஊடகவியலாளர்கள் பலர் அவருக்கு எதிராக இருக்கின்றனர். இதன்படி 8 ஆம் திகதி அவரின் தோல்வி உறுதியானதே.

தோற்றாலும் போகப்போவதில்லையெனக் கூறுகின்றனர். இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமைக்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.எவ்வாறாயினும் சிறு சிறு விடயங்களைச் செய்தாலும் ராஜபக்ஷக்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக இராணுவத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு முடியாது. 
அத்தகைய நிலைமைக்கு நாட்டு மக்கள் இடமளிக்கப் போவதில்லை. அந்த நிலைமை ஏற்பட்டால் நாட்டின் அரசியலுக்கும் மற்றும் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சந்தேகமின்றி உங்களின் வாக்குகளைப் பயன்படுத்துமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கின்றோம். நாம் தேர்தல் ஆணையாளருடன் வாக்கு உரிமை தொடர்பாகக் கலந்துரையாடலை நடத்தியுள்ளோம். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் வரை மக்களின் அந்த உரிமையைப் பாதுகாப்போம் என தேர்தல்கள் ஆணையாளர்  உறுதியளித்துள்ளார்.

இதேவேளை எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் எமக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 கருத்துக்கள் :