இலங்கை அதிபர் ஆகிறார் மைத்திரிபால சிறிசேனா!

9.1.15

ராஜபக்சேவை பின்னுக்கு தள்ளிய மைத்திரிபால சிறிசேனா இலங்கை அதிபர் ஆகிறார். இன்றே அவர் பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்து எடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் பதிவான வாக்குகளின் அடிப்படையில் மொத்தம் 70 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் 1,115 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு 7 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் ராஜபக்சே பின்னடைவை சந்தித்துள்ளார்.


அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட 63 வயதான மைத்ரிபால் சிறிசேனா முன்னிலை பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவை விட 3 லட்சம் வரையிலான வாக்குகள் அதிகமான வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். சிறிசேனா 28,22,788 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். ராஜபக்சே 25,27,876 ஓட்டுக்கள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதன்படி, சிறிசேன 52.08 சதவீத வாக்குகளையும், ராஜபக்சே 46.64 சதவீத வாக்குகளையும் இதுவரை பெற்றிருக்கின்றனர். அதிகமான வாக்குகள் முன்னிலையில் தொடந்து சிறிசேனாவே முன்னிலை பெற்று வருகிறார்.


50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுக்களை பெற்ற சிறிசேனா இலங்கையின் அதிபராகிறார். அவர் இன்றே பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதற்கிடையே வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்த அதிபர் ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியை ஒப்புக் கொண்டார் என்று அவரது ஊடக செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :