'மைத்திரிக்கு ஆதரவளித்தமை தாமதமான முடிவு'

1.1.15

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கொண்டிருந்த மதிப்பினால் தான் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினேவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினேவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர், நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது வேட்பாளருக்கு அதரவளிக்போவதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன.

ஆனால், நான் எனது முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது நான் கொண்டிருந்த மதிப்பினால் தான் நான் அவ்வாறு செய்தேன்.

ஆனாலும் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை கருத்திற் கொண்டு எனது தீர்மானத்தை நான் இன்று தெரிவித்துள்ளேன்.
நான் அரசாங்கத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக இருக்கின்றேன். நான் ஒருபோதும் சேறு பூசும் அரசியலில் ஈடுபட்டத்தில்லை. அந்த முடிவு எனது தனிப்பட்ட நலன்களை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டது அல்ல. மக்களின் எத்ர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னை ஒருநாளும் முஸ்ஸிம் அரசியல்வாதி என்று நான் சொல்லிக்கொண்டதில்லை. நான் இலங்கையின் அரசியல்வாதி. அதனையே நான் விரும்புகிறேன். தமிழ், சிங்கள, முஸ்லிம், என் அனைத்து மக்களின் அசியல்வாதியாக நான் என்றும் செயற்படுவேன்.

சிறுபான்மையினத்தை சேர்ந்த நான் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தேன். கண்டியில் உள்ள பௌத்த சிஙகளவர்களால் 100க்கு 60 சதவீத வாக்குகளை நான் பெற்று வெற்றியீட்டியிருந்தேன்.
அந்தளவு நாட்டு மக்கள் அனைவரும் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இலங்கையில் வேறு எந்த ஒரு சிறுபான்மையின அரசியல்வாதியும் பொரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றதில்லை.

அரசியலில் ஈடுபடுபவர்கள் சில சந்தர்பங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டி ஏற்படும். அதனையே நான் இன்று செய்துள்ளேன்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் யுகபுருஷர்கள் தோன்றுவார்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார். எனினும் இப்போது மற்றுமொரு யுகபுருஷரின் தேவை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த யுகபுருஷன் மைத்திரிபால சிறிசேன என்பது எனது நம்பிக்கை.

நான் அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதால் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இன்று முதல் வழங்கப்பட மாட்டாது. எனது பாதுகாப்பு மக்கள் கைகளிலேயே உள்ளது என்றார்.

0 கருத்துக்கள் :