சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட பணத்தை விட வடமாகாண சபைக்குக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது

9.1.15

மகிந்தராஜபக்சவின் மத்திய அரசாங்கம் வடமாகாண சபைக்குத் தாங்கள் பெருமளவு தொகையை ஒதுக்கியதாகவும், அவற்றை உரிய வகையில் நாங்கள் பயன்படுத்தவில்லை எனவும் தவறான பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.
ஆனால், அண்மையில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட பணத்தை விட வடமாகாண சபைக்குக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்.
வடமாகாண சபைக்குப் பிராமண அடிப்படையிலான நன்கொடை வேலைத்திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டுக்குட்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள் ஆகியோருக்கு இலவசமாகக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு ஏழாலை மேற்கு ஸ்ரீவிநாயகர் ஐக்கியநாடுகள் சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வருடங்கள் நான்கு மாதங்களில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளையும் தாண்டி நாங்கள் எமது மக்கள் மத்தியில் திறமையான முறையில் வேலை செய்திருக்கிறோம்.
எங்கள் முதலமைச்சர் உட்பட வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் அடிமட்டத்திலிருக்கக் கூடிய மக்கள் மத்தியில் எங்கள் சக்திக்குட்பட்ட வகையில் சேவையாற்றியிருக்கிறோம்.

எங்களுக்குப் பல்வேறு எதிர்பார்ப்புக்களிருந்த போதும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு தடங்கல்கள் காணப்படுகின்றன.
எனினும் பிறந்திருக்கின்ற புத்தாண்டில் கடந்த வருடத்தை விட அதிக உத்வேகத்துடன் மக்கள் மத்தியில் சேவையாற்றுவோம் என்ற நம்பிக்கையிருக்கிறது.

வடமாகாண சபை அமைந்ததற்குப் பின்னர் கடந்த 2014 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி எமது முதலமைச்சர் நல்லிணக்கச் சமிக்ஞையொன்றை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் அழைத்துச் சென்று கதைத்தார்.

ஆனால், அதன் பின்னர் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான சமிக்ஞை எதனையும் வெளிக்காட்டவில்லை என்றார்.

 

0 கருத்துக்கள் :