60,000 மதுபோத்தல்கள் முன்னாள் அமைச்சரின் உறவினருடையதாம்

19.1.15

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 60,000 மதுபான போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் மற்றும் இரண்டு லொறிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, சந்தேகத்தின் பேரில் அந்த கட்டடத்தின் உரிமையாளர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றியே இந்த மதுபான போத்தல்கள் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இந்த களஞ்சியசாலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவருடையது என்று தெரிவிக்கப்படுகின்றது.


வயம்ப அதிவிசேட சாராயம் அடங்கிய கனரக வாகனமே கைப்பற்றப்பட்டுள்ளது. மதுபானம் ஒரு போத்தல், அரை போத்தல் மற்றும் கால் போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, செயற்கை வேதியல் பொருட்களும் லேபள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முன்னாள் அமைச்சர் ஒருவரின் மிகநெருங்கிய உறவினர் ஒருவரே இந்த கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக்கொண்டிருப்பதாகவும் எனினும், மதுபானங்களை களஞ்சியப்படுத்துவதற்கு அனுமதி பெற்றிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் பெறுமதி கோடி ரூபாய் பெறும் என்றும், நீதிமன்றத்தின் உத்தரவைப்பெற்று அந்த கட்டடத்தில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :