இராணுவ சதிக்காக வடக்கிலிருந்து கொழும்புக்கு வந்த 2000 படையினர்

17.1.15

இராணுவ சதியொன்றை மேற்கொள்ளும் முயற்சியாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு 3 நாட்கள் முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2 ஆயிரம் படையினரை கொழும்புக்குள் நகர்த்தியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.ரி.வி.க்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, வடக்கில் இருந்தே படையினர் கொழும்புக்குள் நகர்த்தப்பட்டிருந்ததாகவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தியிருந்த அலரி மாளிகையை சுற்றியும் அதேபோல், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தை சுற்றியும் அவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடு ஏதேனும் அவசியமெனில் அது பற்றி பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணையாளரினால் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் ஆனால், இந்த விடயத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திடம் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்னர் படையினரை அவர்களது முகாம்களுக்கு திரும்பிச் செல்ல புதிய அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.

இதேநேரம், வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போது ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அதிகாலை மகிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் கூட்டமொன்றை நடத்தியிருந்ததாகவும் அதில் அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ, அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்ததாகவும் தற்போதைய வெளிவிவகார அமைச்சரான மங்கள் சமரவீர என்.டி.ரி.வி.க்கு தெரிவித்துள்ளார்.

"காலை 4 மணியளவில் இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபருடன் சட்ட மா அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது' என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இது அரச துரோகத்துக்கு ஒப்பானது என்று கூறி சட்ட மா அதிபர் மறுத்துவிட்டதாகவும் அதேபோல், இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் பாதுகாப்பு பிரதானிகளும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது அவர்களது தைரியம் காரணமாகவே நடந்தது என்றும் அதனால் இலங்கையின் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமையானது சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளமையினால் இதன் நோக்கங்கள் பற்றி பலரும் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் என்.டி.ரி.வி. சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், விசாரணைகளானது நீதியாக மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொன்சேகாவும் மங்கள சமரவீரவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

"போதுமான ஆதாரங்கள் இருக்குமாயின் சட்டம் அதன் கடமையைச் செய்யும்'என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :