அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்...

7.12.14

பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்து வரும் அறிக்கைகளால் அதிர்ச்சியடைந்துள்ளது.

தான் பேரினவாதியாம், சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லையாம், ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்படுமாம். தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போன்று மாகாண அதிகாரங்களை ஒருபோதும் வழங்க முடியாதாம், இது பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடாம் என மைத்திரி அடுக்கிவரும் அறிக்கைகளால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வதறியாத நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அக்கட்சிக்குள் மைத்திரியை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டாம் எனும் கருத்து வலுப்பெற்று வருகிறது. மைத்திரிபாலவின் அறிக்கைகளை வாசித்த தமிழ் மக்களும் அவருக்கு தமிழ்க் கூட்டமைப்பு மட்டுமல்ல எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஆதரவு வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இப்போது பாரிய நெருக்கடியும், இழுபறிநிலையும் காணப்படுவதாக அக்கட்சி உள்ளக வட்டாரங்களிலிருந்து நம்பகரமாகத் தெரியவந்துள்ளது.
இதேபோன்று பொது வேட்பாளர் தெரிவில் முன்னின்று பாடுபட்ட மற்றுமொரு தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் மைத்திரிபாலவின் எதேச்சையானதும், தமிழ் மக்களை வெறுப்பேற்றும் அறிக்கைகளாலும் மனமுடைந்து விரக்தி நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்காததுடன் இனப்பிரச்சினை தொடர்பாக மனோ கணேசனினால் சிங்கள மொழியில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாது அலட்சியமாக இருந்து வருவதாகவும் மனோ கணேசன் தனது முக நூலில் பிடிகொடாது மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை காலமும் தமிழ்க் கூட்டமைப்பினாலும், மனோ கணேசனினாலும் இனவாதக் கட்சி என கூறப்பட்ட ஜாதிக ஹெல உருமய கட்சி தமிழ் மக்களுக்குத் தீவு கிடைப்பதை நேரடியாகவே பல தடவைகள் எதிர்த்து வந்தது. இப்போது அக்கட்சி பொது எதிரணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளமையையும் தமிழ்க் கூட்டமைப்பினாலும், மனோ கணேசனினாலும் ஜீரணிக்க முடியாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :