எனக்கு பிள்ளைகள் இல்லை, எனக்கென்று குடும்பம் இல்லை :ரணில்

6.12.14

எனக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கென்று குடும்பம் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கும் எவரும் இல்லை. எனது நோக்கம் நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு நல்லதொரு எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதாகும். அதனை நான் முன்னின்று செய்வேன். இதற்கமைய 5 வருடத்தில் 16 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன் என ஐ.தே.க. தேசிய தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ரணில் விக்கிரம சிங்க சூளுரைத்தார்.

மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த முடியாது. எனவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆக்கி 2 வருட தேசிய அரசின் ஊடக நாட்டின் முக்கிய பிரச்சினையை தீர்ப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாண இளைஞர் அணியின் மாநாடு கொழும்பு முத்தையா மைதானத்தில் பெற்ற போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் கூறுகையில்,
தற்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதி ஆக்குவதற்காக மஹிந்த ராஜ பக் ஷ தேர்தலில் போட்டியிடுகிறார். நாட்டில் யுத்தம் இடம் பெற்ற வேளை அனைவரும் யுத்தம் நிறைவு பெறும் வரையில் அமைதி காக்கவும் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ உறுதியளித்தார்.
இதனை கருத்திற் கொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.

யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு வீதியெங்கிலும் பாற்சோறு பங்கிட்டு குதுகலிப்பில் ஈடுப்பட்டனர். எனினும் யுத்தம் நிறைவடைந்தவுடன் ஜனாதிபதி நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

இதனால் இளைஞர்களின் கனவு நனவாகவில்லை. உண்மையாக சுதந்திரம் கிடைக்கவில்லை. கடனுக்கு மேல் கடன் பெற்று ஒவ்வொரு குடும்பமும் சீர்குலைந்துள்ளது.
எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றிக் மஹிந்த ராஜ பக் ஷ தோற்கடித்து எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்க வேண்டும்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தோம். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனவுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து கட்டுவோம். அதன்பிற்பாடு அனைத்து கட்சியினரும் ஆதரவுடன் இரண்டு வருடம் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்போம். அதன் பிற்பாடு பாராளுமன்ற தேர்தலினூடாக ஐ.தே.கட்சி ஆட்சியை ஏற்படுத்துவோம்.

ஊழல், மோசடி இல்லாமல் செய்யாவிடின் நாட்டை முன்னேற்ற முடியாது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றே நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று கொடுப்பதே எனது நோக்கம்.
தற்போது இளைஞர்களுக்கு தொழில் இருந்தும் போதிய வருமானம் இல்லை. நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இலங்கை இளைஞர்கள் தனது நாட்டில் உழைக்க முடியாமல் வெளிநாட்டு செல்ல வேண்டிய நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருக்கும் வரை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த இயலாது. எனது நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பதே எமது நோக்கம். எனக்கு குழந்தைகள் இல்லை. எனக்கென்று குடும்பங்கள் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கு கூட எவரும் எனக்கு இல்லை.

 எனவே எனக்கு இந்நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இதற்காக நான் முன்னின்று செயற்படுவேன். இதற்கமைய 5 வருடத்தில் 16 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார்.

0 கருத்துக்கள் :