பத்துகோடி ரூபாவுக்கு விலை பேசப்பட்டது

4.12.14

தன்னை அரசுடன் தொடர்ந்து வைத்திருப்பதற்காக பத்துக் கோடி ரூபா பேரம் பேசப்பட்டதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தான் பணத்துக்காக விலை போகும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல எனவும் தெரிவித்தார்.

அரசிலிருந்து பலரும் அடுத்தடுத்து வெளியேறி வருவதையடுத்து அதனை தடுக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதி பெரும் பிரயத்தனத்திலீடுபட்டு வருகின்றார். அவரால் தேர்தல் பிரசார மொன்றுக்கான நிகழ்ச்சித் திட்டத்தை கூடத் தயாரிக்க முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

என்னால் பெயரை வெளியிட முடியாத நண்பரொருவர் மூலம் நான் அரசு பக்கம் திரும்புவதற்கு பத்துக் கோடி ரூபா தருவதற்கு பேரம்  பேசப்பட்டது. இதனை நான் முற்றாக நிராகரித்து விட்டேன். பணத்துக்கு விலை போகும் பரம்பரையில் நான் பிறக்கவில்லை.
அரசில் இருந்து மேலும் பலர் வெளியேறத் தயாராகி வருகின்றனர். அவர்களை வெளியேற விடாமல் தடுப்பதற்காக பெருந்தொகை பணம், பதவிகள் கொடுக்க பேரம் பேசப்பட்டு வருவதாக அறியவந்துள்ளது.

சிலவேளை ஓரிருவர் விலைபோகக்  கூடும். எல்லோரும் விலை போவார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 ராஜபக்ஷ ஆட்சி பகற்கொள்ளையடிக்கும் ஊழல் மலிந்த ஆட்சியாக காணப்படுவதாகவும் அரசின் ஊழல் தொடர்பான ஆதாரபூர்வமான ஆவணங்கள் தம்மிடமிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் ஆணைக்குழு அமைத்து விசாரிப்பதற்காக அவை சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

நான் பதவி விலக முன்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் தெரிவித்த ஊழல் குறித்த விடயத்தில் முக்கியமானது சீனாவின் எக்சிம் வங்கி மூலம் அதிவேக பாதைகளுக்கு காபற் போடும் திட்டத்துக்கு 412 மில்லியன் டொலர் பெற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இது தொடர்பான திட்டத்தில் ஒரு கிலோ மீற்றருக்கு காபற் போட 2 மில்லியன் டொலர்களே செலவிடப்பட வேண்டும். ஆனால் செலவு விபரத்தில் ஒரு கிலோ மீற்றருக்கு 16.49 மில்லியன் டொலர் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று கொழும்பு நகரில்  ஒரு சுற்று வட்டத்துக்கு காபற் போடுவதிலும் பெரும் ஊழல் இடம்பெற்றுள்ளது.அரசில் அமைச்சராக இருந்து கொண்டு என்னால் பேச முடியாதிருந்தது. அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு இருந்தமையே இதற்குக் காரணம். இப்போது நான் வெளியே வந்து விட்டேன்.

நிறைய விடயங்கள் ஆதாரபூர்வமாக என்னிடம் உ ள்ளன. அவற்றை உரிய நேரத்தில் வெளியிட விருக்கின்றேன். தூய்மையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இன்று நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஜனவரியில் நிச்சயமாக மைத்திரிபால வெற்றியீட்டுவார். அந்த வெற்றியின் பங்காளர்களாக நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் நவீன் திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

0 கருத்துக்கள் :