குழந்தைகள் கொலைக்கு அல்–கொய்தா தீவிரவாதிகள் கடும் கண்டனம்!

22.12.14

பாகிஸ்தான் ராணுவப் பள்ளி குழந்தைகள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு அல்–கொய்தா தீவிரவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பெஷாவரில் ராணுவ பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் 132 பள்ளி குழந்தைகளையும், 12 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர படுகொலை சர்வதேச நாடுகளை அதிர்ச்சியுறச் செய்தது.

அதையடுத்து, அங்கு தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க பிரதமர் நவாஸ் செரீப்பும், ராணுவ தலைமை தளபதி ஷகிப்பும் சபதம் பூண்டனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி 150க்கும் மேற்பட்டவர்களை கொன்றதுடன் தொடர்ந்து தாக்குல் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி குழந்தைகளை கொன்று குவித்துள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு உலக அளவில் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்களின் தோழமை தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்காசிய பிரிவு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒசாமா மெக்மூத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பள்ளி குழந்தைகளை தலிபான்கள் கொன்று குவித்த சம்பவம் எங்கள் இதயங்களை வெடிக்க செய்துவிட்டது. மனங்கள் நொறுங்கி விட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றம் மற்றும் கொடூமைகள் எல்லைத் தாண்டிவிட்டது என்பதில் எந்தஒரு சந்தேகமும் இல்லை. ராணுவம் அமெரிக்காவிற்கு அடிமையாக செல்கிறது, முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால்,  அதற்காக நாம் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை பழிவாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

கடவுளின் எதிரிகளுக்கு எதிராகவே துப்பாக்கி ஏந்த வேண்டும். அதை விடுத்து குழந்தைகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்துவது நோக்கமல்ல. நமது இலக்கு ராணுவத்துக்கு எதிராக போராடுவதே" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :