100, 200 மில்லியனுக்காக விலைபோவோரை இந்தத் தேசம் ஒருபோதும் மன்னிக்காது

9.12.14

அராஜகத்திற்கும் அக்கிரமத்துக்கும்  சர்வாதிகாரமிக்க குடும்ப ஆட்சிக்கும் முடிவுகட்ட நாட்டு மக்களே அணி திரள்கையில் 100, 200 மில்லியனுக்காக துணை போவோரை இந்த தேசம் ஒருபோதும் மன்னிக்காதென முன்னாள் இராணுவத் தளபதியும்  ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

  கொழும்பு 7 இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஜனநாயக  கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா  இவ்வாறு தெரிவித்தார்.
 இது தொடர்பிபாக அவர் மேலும் தெரிவிக்கையில் ;
 மோசமான குடும்ப ஆட்சியை முடிவுக்கு  கொண்டு வருவதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு  ஜனநாயக கட்சி ஆதரவு வழங்கியுள்ளது.

 அத்துடன் இந்த குடும்ப ஆட்சியின்  மோசமான ஆட்சியாளரை எதிர் கொள்வதற்கு பாதுகாப்பையும் மனத் தைரியத்தையும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் வழங்குகிறோம். தற்போது உள்ள அரசியல் கலாசாரம் மிகவும் கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும். மக்களுக்குப் பொய்யாக வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்று செயற்பாடுகள் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 அவ்வாறு மக்களை ஏமாற்றும் கட்சிக்கு  ஐக்கிய  தேசிய கட்சியிலிருந்து ஒருவர் விலகிச் சென்றுள்ளார்.
நாட்டு மக்களையும் அவர்களது எதிர்பார்ப்பையும் காட்டிக் கொடுத்து 100 ,200 மில்லியன்களுக்கு விலை போய்விட்டார். அவர் மட்டுமல்லாது எனது கட்சியின் துணைத் தலைவரும் ஆளும் தரப்பின் இந்த சதிவலையில்  சிக்கிவிட்டார். இதுபோன்ற அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது நானும் அரசியல்வாதி எனக் கூறுவதில் வெட்கமடைகிறேன்.

 இந்த நாட்டில் அதிகரித்துள்ள ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் நாட்டின் ஆட்சியாளரே காரணம். அதனாலேயே ஆளும் தரப்பு எதிர் தரப்பிலிருக்கும் உறுப்பினர்களை இலஞ்சம் கொடுத்து  வாங்குகிறது. அரசியலில் கலந்துள்ள இந்த இலஞ்ச முறைமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

 நடைபெறவுள்ள தேர்தலில் நாம் வெற்றி பெற்றவுடன் 200 இலட்சம் இலங்கையர்களுக்கும் சேவையாற்றுவோம். எவ்வித கட்சி பேதமுமின்றி நாம் எமது சேவையினை முன்னெடுப்போம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

0 கருத்துக்கள் :