வாயை மூட வைத்த பதிலடி

21.11.14

நோர்வேக்கு எதிரான புதிய போர் ஒன்றை மீளவும் ஆரம்பித்துவைத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
வடக்குக்கான தேசிய நெடுஞ்சாலைக்கு குருநாகலில் அடிக்கல் நாட்டிய பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதுக்காக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீதும் முன்னாள் நோர்வே அரசாங்கம் மீதும் விசாரணைகளை நடத்த வேண்டுமென்று நோர்வே அரசாங்கத்தை அவர் கேட்டிருந்தார்.

இந்த விவகாரத்தை இவ்வளவு காலம் கழித்து, இலங்கை அரசாங்கம் கிளப்பியுள்ளதும் இப்பிரச்சினையை கிளப்புவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள சந்தர்ப்பமும் மிகமிக முக்கியமானவை.  எனவே, இது திட்டமிடப்பட்ட அடிப்படையில் எழுப்பப்பட்ட பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடத் தயாராகியிருந்த சூழலில்தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளார். அத்துடன், வடக்குக்;கான தேசிய நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டிவிட்டே அவர் இதைக் கூறியிருக்கிறார்.

 அதாவது, அன்று எரிக் சொல்ஹெய்ம் புலிகளை தோற்கடிக்க முடியாதென்று  கூறினார். ஆனால், நாங்கள் இப்போது வடபகுதிக்கு சுதந்திரமாக பயணிக்கும்  நிலைமையை உருவாக்கியுள்ளோம்.  வடக்குக்கான தேசிய நெடுஞ்சாலையை அமைக்கப்போகிறோம் என்ற இறுமாப்புடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்.

தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் போர் வெற்றியை மீளவும் நினைவுபடுத்துவதும் நோர்வே போன்ற வெளிநாடுகளின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி மக்களை கவர்வதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமாகத் தெரிகிறது.

என்னிடமே வந்து,  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை உங்களின் படையினரால் வெல்லமுடியாது. அவர் மிகச் சிறந்த போர்வீரன் என்று புகழ்ந்துரைத்தவரே எரிக் சொல்ஹெய்ம். அப்போது அவருக்கு நான் கூறினேன், வே.பிரபாகரன் வடக்குக்காட்டில் பிறந்தவர் என்றால், நான் தெற்குக்காட்டில் பிறந்தவன்.

புலிகளை போரில் வெற்றி பெறமுடியாதென்று கூறியவர்களுக்கு, அதைச் சாதித்துக் காட்டினோமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருமையுடன் அக்கூட்டத்தில் கூறியிருந்தார். இதிலிருந்து இம்முறையும் போர் வெற்றியை நினைவுபடுத்தியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த காலங்களில் சிங்களத் தேசியவாத சக்திகளின் வாக்குகளை திரட்டிக்கொடுப்பதில் முன்னின்ற ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்நிலையில், போர் வெற்றியை வைத்து சிங்களத் தேசியவாத வாக்குகளை தக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
கடந்த தசாப்தத்தில், நோர்வேக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் மூலமும் எரிக் சொல்ஹெய்மின் உருவப்பொம்மைகளை கொழும்பு வீதிகளில் எரித்துமே, ஜாதிக ஹெல உறுமய என்ற சிறியதொரு குழு பலமான அரசியல் கட்சியாக பிரபலம் பெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்தம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமயவும் நோர்வே அரசாங்கத்துக்கும் எரிக் சொல்ஹெய்முக்கும் எதிராக நடத்திய போராட்டங்கள், இலங்கையில் சிங்களத் தேசியவாதம் மீண்டும் உசுப்பேற்றப்பட்டதுக்கு  முக்கிய காரணமாக இருந்ததென்பதை மறுக்கமுடியாது.

அதுபோலவே, இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு கொண்டுவந்திருந்தன. ஆனால், போர் முடிவுக்கு வந்த கையோடு அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட ஜே.வி.பி., 2010ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொதுவேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தது.

இதுவரையில் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமயவும் கடந்த வாரத்துடன் அரசாங்கத்தை விட்டு விலகியிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், யாருடைய தயவில் ஆட்சியை பிடித்தாரோ, அவர்களே இன்று அவரது காலைப்பிடித்து இழுத்துக் கவிழ்ப்பதுக்கான பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இத்தகைய நிலையிலேயே, நோர்வேயையும் எரிக் சொல்ஹெய்மையும் சீண்டிப்பார்த்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தவர், போர்க்குற்றங்கள் குறித்த அரசாங்கத்துக்கு எதிராக ஜெனீவாவில் சாட்சியமளித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

வரப்போகும் தேர்தலை கருத்திற்கொண்டு அரசியல் இலாபம் கருதி, இவ்விவகாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது கையில் எடுத்திருக்கிறார் என்பது வெளிப்படையான விடயம். நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் கூட இதனையே  கூறியிருக்கிறார்.

ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அளித்திருந்த பேட்டியொன்றில்,  அரசியல் இலாபம் கருதி நோர்வே மீதும் தன் மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, இலங்கையில் கடந்த ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாகவே, உள்நாட்டு அரசியல் இலாபத்துக்காக நோர்வே பயன்படுத்தப்படுவது வழக்கமே என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலின்போது, ஐ.நா. நடத்தும் போர்க்குற்ற விசாரணையையும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சர்வதேச சூழ்ச்சி நடப்பதாகவும் அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, பல தேர்தல் பிரசார மேடைகளில் உரையாற்றும்போது, தன்னை மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு பல நாடுகளும் உள்ளூர் அமைப்புகள் சிலவும் சூழ்ச்சி செய்வதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அந்தப் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
இதுபோன்ற பிரசாரங்களையும் மீறி, ஊவா மாகாணசபைத் தேர்தலில், அரசாங்கத்தின் வாக்குவங்கி கணிசமாக சரிந்துபோனது. இதனால், மீண்டும் மின்சார நாற்காலி பற்றியோ, வெளிநாட்டுச் சூழ்ச்சி பற்றியோ பிரசாரம் செய்து பலனில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொண்டிருக்கிறது.

 இதனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே அரச தரப்பின் தேர்தல் வெற்றிக்கு கைகொடுத்த நோர்வையேயும் எரிக் சொல்ஹெய்மையும்
 விடுதலைப் புலிகளையும் பிரசாரத்துக்கு இழுத்துப் பார்த்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதற்கு முன்னரும், நோர்வே மீதும் எரிக் சொல்ஹெய்ம் மீதும் அரசாங்கம் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது.

ஆனால், அதற்கு இதுவரைகாலமும் நோர்வேயிடமிருந்தோ, எரிக் சொல்ஹெய்மிடமிருந்தோ அரசாங்கத்துக்கு பெரிதாக எந்தப் பதிலடியும் வந்தது கிடையாது. நோர்வே அரசாங்கம் மௌனமாக இருந்தாலும்,  எரிக் சொல்ஹெய்ம் இம்முறை அப்படி அமைதியாக இருந்துவிடவில்லை.

இங்கு நோர்வே அரசாங்கம், இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு காரணம், அப்போதைய அரசாங்கம் இப்போது ஆட்சியில் இல்லை என்பதாலேயே.

சமாதான முயற்சிகளில் நோர்வே ஈடுபட்ட காலத்தில், ஆட்சியிலிருந்த எரிக் சொல்ஹெய்மின் கட்சி, அண்மைய தேர்தலில் ஆட்சியை இழந்துவிட்டது. எனவே, முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கம் மீது வரும் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய தேவை தற்போதைய அரசாங்கத்திடமில்லை.
அதைவிட, முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு செய்த உதவி தொடர்பில் விசாரிக்க வேண்டுமென்று இப்போதைய அரசாங்கத்திடமே  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார்.

 எனவே, தற்போதைய நோர்வே அரசாங்கம் இந்த விடயத்தில் வாயைத் திறக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால், எரிக் சொல்ஹெய்ம் அப்படி மௌனமாக இருக்கவில்லை. அவரால் அப்படி மௌனமாக இருந்துவிடவும் முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்| குருநாகல் கூட்டத்தில் உரையாற்றிய மறுநாளே, அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் உடனடியாக தனது டுவிட்டரில் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டார் எரிக் சொல்ஹெய்ம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் நோக்கத்துக்காக பொய் சொல்கிறார், இதற்கு நாளை நான் பதிலளிப்பேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை டுவிட்டரில் பதிவு இட்டிருந்தார்.
டுவிட்டரில் கூறியிருந்தது போலவே, கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அவற்றுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாரிசிலிருந்து எரிக் சொல்ஹெய்ம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கியமான விடயம், அரசியல் ஆதாயத்துக்கு தம்மையோ, நோர்வேயையோ பயன்படுத்துவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதாகும்.

 நடக்கவிருக்கின்ற தேர்தலில் தனது பெயர் எந்தவிதத்திலும் இழுக்கப்படுவதை அனுமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லாத காரணத்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எல்லோரும் அறிந்திருக்கின்ற வெளிப்படையான தகவல்களை மீண்டும் தான் வெளிப்படுத்துவதாக அறிக்கையின் தொடக்கத்திலேயே  அவர் கூறியிருக்கிறார்.

அரசாங்கத்தின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு அதனை முறியடிக்கவேண்டும் என்பதற்காகவே, எரிக் சொல்ஹெய்மிடமிருந்து உடனடியான இந்தப் பதிலடி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியாமல் எந்த உதவியையும் விடுதலைப் புலிகளுக்கு நோர்வே வழங்கியிருக்கவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் எடுத்துக் கூறியிருக்கிறார்.

புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள்  பற்றிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதி கூறிய குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்,  புலிகளுக்கு நிதியுதவி எதுவும் நேரடியாக வழங்கப்படவில்லை என்றும் சமாதானச் செயலகத்துக்கே பொருளாதார உதவிகள் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவை எல்லாமே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியுமென்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக அவர் பதவியிலிருந்தபோது இது பற்றிய விபரங்கள் அனைத்தும் தெரியப்படுத்தப்பட்டதாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார். அதாவது, சமாதான முயற்சிகளில் நோர்வே வெளிப்படைத்தன்மையுடனேயே நடந்துகொண்டது. எந்த ஒழிவுமறைவுகளும் இருக்கவில்லை  என்று மட்டும் காட்டுவதற்கு அவர் முற்படவில்லை. அதற்கும் அப்பால், இந்தச் சமாதான முயற்சிகளின் அத்தகைய விவகாரங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தொடர்புகள் இருந்தன, அவருக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதன் மூலம் நோர்வையேயும் தன்னையும் வைத்து அரசியல் ஆட்டம் நடத்தப்படுவதற்கு செக் வைத்து தடுக்கவும் முனைந்திருக்கிறார்.

சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை மட்டும் எரிக் சொல்ஹெய்ம் கூறவில்லை. அதற்கும் அப்பால்,  வே.பிரபாகரனுக்கு பலமுறை செய்திகளை கொண்டுசென்று சேர்ப்பிக்குமாறும்; கேட்டுக்கொண்டார்.

 அதன்படியே, தகவல்களை பரிமாறினேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர், விடுதலைப் புலிகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை என்பது போன்ற அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் முனைந்திருக்கிறார்.

சமாதான முயற்சிகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் தாமும் பிரிட்டிஷ் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான மார்க் சால்டர், தன்னுடனும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்கெடுத்திருந்த நோர்வேயின் அப்போதைய துணை வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கிசனுடனும் இணைந்து எழுதும் நூலில் விரிவாக குறிப்பிடப்படுமென்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தளவுக்கு எரிக் சொல்ஹெய்ம் வேகமான பதிலடியொன்றை கொடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்த்திருக்காது. எரிக் சொல்ஹெய்மின் பதிலறிக்கை வெளியாகி பல நாட்களாகியும் அரச தரப்பிலிருந்து அது குறித்து இன்னமும் பதிலேதும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், நோர்வேயை வைத்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த அரசாங்கத்துக்கு, இந்தப் பதிலறிக்கை ஒரு தடையாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்துக்கு இப்போது தேர்தல் பிரசாரங்களில் முன்னிலைப்படுத்தும் அளவுக்கு முக்கியமான விவகாரங்கள் என்று எதுவுமில்லை. அதாவது, இலகுவாகவும் விரைவாகவும் பொதுமக்களை சென்றடையத்தக்க,  அவர்களை கவரத்தக்க விடயங்கள் என்று ஏதுமில்லை. எனவேதான், பழைய கோப்பையில் புதிய கள்ளை பரிமாற முனைந்திருந்தது.

எவ்வாறாயினும், எரிக் சொல்ஹெய்மிடமிருந்து அதற்கு சிவப்புக்கொடி காட்டப்பட்டுள்ளதால், தொடர்ந்தும் நோர்வே மற்றும் எரிக் சொல்ஹெய்ம் மீது தாக்குதலை அரசாங்கம் நேரடியாக மேற்கொள்ளாமல் தவிர்க்கக்கூடும். ஏனென்றால், இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்...கே.சஞ்சயன்/http://tamil.dailymirror.lk

0 கருத்துக்கள் :